ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பனாஷ்பரா கிராமத்தில் மடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மடத்தில் பாக்யதர் தாஸ் மற்றும் பஞ்சனன் தாஸ் என்ற இரு இளைஞர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை வலுக் கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், தொடர்ந்து எங்களது ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லையென்றால் உன்னையும், உனது குடும்பத்தையும் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியிருக்கின்றனர். இதனால் பயந்துபோன அந்த சிறுமி, அவர்களால் ஏற்பட்ட கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்திருக்கிறார்.

இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பாக்யதர் தாஸ் மற்றும் பஞ்சனன் தாஸ் இருவரும் சிறுமியைத் தொடர்ந்து பல முறை வன்கொடுமை செய்து வந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த சகோதரர்கள் இருவரும், கருவைக் கலைக்குமாறு சிறுமியிடம் கூறியுள்ளனர். கருக்கலைப்புக்கு பணம் கொடுக்கவும், வசதிகளைச் செய்யவும் அவர்கள் முன்வந்துள்ளனர். ஆனால், சிறுமி கருவைக் கலைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், தங்களுக்கு பிரச்சனை வந்துவிடுமோ என்று அஞ்சிய சகோதரர்கள் இருவரும், சிறுமியின் கதையை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், சிறுமியை ஆள் நடமாட்டமில்லாமல், ஒரு காட்டுப் பகுதிக்கு வருமாறு இரு சகோதரர்களும் மிரட்டியுள்ளனர். மிரட்டலுக்கு பயந்துபோன அந்த சிறுமி, அந்த இடத்துக்கு வந்துள்ளார். அந்தப் பகுதிக்குள் குழி ஒன்று வெட்டிவைக்கப்பட்டிருந்ததைக் கண்டு திகைத்த சிறுமியைப் பார்த்து, “ஒழுங்காகக் கருவைக் கலைத்துவிடு; இல்லையென்றால் கொன்றுவிடுவோம்” என்று கூறியிருக்கின்றனர். அப்போதும் சிறுமி மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த இருவரும், குழிக்குள் தள்ளி சிறிதும் இரக்கமின்றி உயிருடன் புதைக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமி வீட்டுக்கு வந்து நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கதறி அழுதிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், குஜாங் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இரு சகோதரர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் வன்கொடுமை செய்து, கர்ப்பமான சிறுமியைக் கொலை செய்ய முயன்றது தெரியவந்திருக்கிறது. மேலும் இந்தச் சகோதரர்கள் இருவருக்கும் மற்றொரு நபர் உதவி செய்ததும் தெரியவந்திருக்கிறது. தற்போது அந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

ஒடிசா மாநிலத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்ததில் இருந்தே, சட்ட ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதை உறுதி செய்யும் வகையில், குற்ற சம்பவங்களும் அதிகரித்தே வருகின்றன. அதிலும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக குற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, சிறுமி ஒருவரை மூன்று ஆண்கள் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தநாள் விழாவுக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமி ஒருவரை, இரண்டு ஆண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இரு சம்பவங்களில் அதிர்வலைகள் குறைவதற்குள் தற்போது, வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமான சிறுமி உயிருடன் புதைக்கப்பட இருந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியிருக்கிறது.

இந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 வன்கொடுமை சம்பந்தமாக வழக்குகள் பதிவான நிலையில், கடந்த ஒரு மாதமாக மாநிலம் முழுவதும், 12 பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியிருப்பது மாநில மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.