கோவை மாவட்டத்தில் உள்ள இருகூர் பகுதியில்.. கடந்த 6ம் தேதி இரவு பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண்ணை சிலர் மிரட்டி வலுகட்டாயமாக காருக்குள் ஏற்றி சென்றதாக, சம்பவத்தை கண்ணால் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். 

Advertisment

அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் கோவை முழுவதும் அலசத்தொடங்கினர். சிங்காநல்லூர் காவல்நிலைய பகுதி உள்ளிட்ட கோவை மாநகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் ரோந்து, சுற்றுக்காவலில் இருந்த காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு, A.G புதூர், இருகூர் சாலை, திருச்சி சாலை மற்றும் சூலூர் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைப் பகுதிகளிலும் தேடும் பணிகள் தொடர்ந்தன. சுமார் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டதன் இறுதியாக இந்த சம்பவம் அம்பலமானது.

Advertisment

போலீஸ் விசாரணையில் அந்த பெண் கடத்தப்படவில்லை என்பதும், கணவன் - மனைவி இடையே நடந்த சண்டையில் பெண் கூச்சலிட்டு கத்தியது தான் காரணம் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து, கோவை மாநகர போலீசார் காரில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் முகம் மறைக்கப்பட்ட வீடியோவை  வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், ''நான், என் கணவர் மற்றும் மகன்  என மூன்று பேரும் துணி தைக்க கடைக்கு சென்றிருந்தோம். வரும்போது பேக்கரியில் டீ சாப்பிட்டுவிட்டு வந்தோம். அப்போது, ராவுத்தர் பிரிவு அருகே வந்தபோது கணவர் என்னை பழம் வாங்க சொல்லி இறங்க சொன்னார். அதற்கு நான் இறங்க முடியாது என கூறினேன்.இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட, ஒரு கட்டத்தில் நான் காரிலிருந்து கீழே இறங்கினேன். அதற்கு என் கணவர், வீட்டிற்கு செல்லலாம், வா என்று கூப்பிட்டார். அதற்கு நான், வரமுடியாது என்று கூறியபோது, காருக்குள் பிடித்து இழுத்து வீட்டில் போய் பேசி கொள்ளலாம் என்று என்னை அடித்தார். பதிலுக்கு நானும் அடிக்க, மகன் எங்களை சமாதானப் படுத்தி வீட்டிற்கு கூட்டி வந்தார்'' என்று அந்த பெண் வீடியோவில் கூறியுள்ளார்.

இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பில் கூறியது போன்று எந்த பெண்ணும் கடத்தப்படவில்லை. காரில் பயணித்தவர்கள் இருகூர் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் என்பதும், கணவன் - மனைவி இடையே பொருட்கள் வாங்குவதில் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரிய வந்தது.

Advertisment