ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. ஆனால், அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்ததால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்தார். இந்த வரி விதிப்பு நடவடிக்கையால், நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது.

Advertisment

இந்த சூழலில், ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா என்ணெய் வாங்கப்போவதில்லை என பிரதமர் மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 15ஆம் தேதி தெரிவித்தார். அமெரிக்கா வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிரம்ப்பிடம், இந்தியாவை நம்பகமான கூட்டாளியாக கருதுகிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், “ஆம் கண்டிப்பாக. பிரதமர் நரேந்திர மோடி என்னுடைய நண்பர். நாங்கள் சிறந்த உறவுடன் இருக்கிறோம். ஆனால், இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என அவர் இன்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உறுதியளித்தார். மாஸ்கோவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இது ஒரு பெரிய அடி. அடுத்ததாக நாங்கள் சீனாவையும் அதே காரியத்தை செய்ய வைக்கப் போகிறோம்” என்று தெரிவித்தார்.

Advertisment

தேசிய நலனுக்காக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து வாங்கும் என மத்திய அரசு கூறி வந்த நிலையில், நேற்று டிரம்ப் இவ்வாறு பேசியிருப்பது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனிடையே, ரஷ்ய எண்ணெய்யை இந்தியா வாங்கப்போவதில்லை என பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் கூற்று குறித்து மத்திய அரசு பதிலளித்தது.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. எங்கள் இறக்குமதிக் கொள்கைகள் முழுமையாக இந்த நோக்கத்தால் வழிநடத்தப்படுகின்றன. நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்வது எங்கள் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளாகும்” எனத் தெரிவித்தார். மேலும், இரு தலைவர்களுக்கும் இடையே எந்தவொரு உரையாடலும் நடைபெறவில்லை. இரு தலைவர்களுக்கும் இடையே எந்த தொலைப்பேசி அழைப்பும் இல்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது.

Advertisment

இந்த நிலையில், இந்தியாவுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடி, அதிபர் டிரம்புக்கும் இடையே எந்த உரையாடலும் நடைபெறவில்லை என்று இந்திய அரசு கூறியது குறித்து டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், “அவர் (பிரதமர் மோடி) என்னிடம், ‘நான் ரஷ்ய எண்ணெய் விஷயத்தைச் செய்யப் போவதில்லை’ என்று கூறினார். ஆனால் அவர்கள் அதைத் தொடர்ந்து செய்தால், அவர்கள் மிகப்பெரிய வரிகளைச் செலுத்த வேண்டியிருக்கும். அவர்கள் தொடர்ந்து பெரிய அளவிலான வரிகளைச் செலுத்துவார்கள், அதைச் செய்ய விரும்பவில்லை. இந்தியா தனது எண்ணெயில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கை ரஷ்யாவிடமிருந்து பெறுகிறது” என்று தெரிவித்தார்.