Trump warns 10% additional tax on BRICS countries including India
ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. கடந்தாண்டு, இந்த கூட்டமைப்பில், எகிப்து, எதியோப்பியா, இந்தோனிசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபி எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்தன. இந்த நிலையில், பிரேசிலில் 17வது ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நேற்று (06-07-25) தொடங்கி நடைபெற்றது. பிரதமர் மோடி உள்பட கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களைக் கண்டித்தும், வரி உயர்வு குறித்து அமெரிக்காவை மறைமுகமாக சாடும் வகையிலும் அறிக்கை வெளியிட்டது.
அதில், ‘வர்த்தகத்தை சிதைக்கும் ஒருதலைப்பட்ச வரி, உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு முரணானவை. அந்தக் கட்டுப்பாடுகள் உலகளாவிய வர்த்தகத்தைக் குறைக்கவும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கவும், நிச்சயமற்ற தன்மையை அறிமுகப்படுத்தவும் அச்சுறுத்துகின்றன. இந்த நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கடுமையான கவலைகளை எழுப்புகிறோம். ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டங்களை மிக வெளிப்படையாக மீறு நடவடிக்கையாகும். ஈரானின் அணுசக்தி நிலையங்கள், மக்கள் வசிப்பிடங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்க விஷயமாகும்’ என்று கூறியது. பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளால் வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்க உள்ளிட்ட எந்தவொரு நாட்டையும் வெளிப்படையாக குறிப்பிடவில்லை.
இந்த நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு விதிவிலக்குகள் இருக்காது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” எனத் தெரிவித்தார்.
முன்னதாக ஏப்ரல் 2ஆம் தேதி சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனால் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதற்கான கால அவகாசம் ஜூலை 9ஆம் தேதியுடன் முடிவடைய நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.