அமெரிக்காவிற்கு நிறைய வரி பற்றாக்குறை இருப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு உலக நாடுகளுக்கு வரியை விதித்தார். அதன்படி, இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்காவில் பல மாகாணங்களில் பல வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisment

இந்த சூழ்நிலையில், சீனா உள்ளிட்ட உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரிவிதிப்பு செல்லாது என அமெரிக்கா உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானது என்றும், எமர்ஜென்சியை பயன்படுத்தி வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் கிடையாது என்றும் கூறி அவர் விதித்த வரி விதிப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். ஒன்பது நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வில், 6 நீதிபதிகள் டிரம்பின் வரிவிதிப்புக்கு எதிராக வாக்களித்தனர். இதன் மூலம், டிரம்ப் விதித்த வரி ரத்து செய்யப்பட்டது.

Advertisment

உலக நாடுகள் மீது தன்னிச்சையாக விதித்திருந்த வரிகள் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த சில மணி நேரங்களிலேயே உச்ச நீதிமன்றத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உலகளாவிய புதிய வரிவிதிப்பை டிரம்ப் அதிரடியாக அமல்படுத்தினார். நீதிமன்ற தடையால் ஏற்பட்ட சட்டப்பூர்வ தோல்வியை தொடர்ந்து, டிரம்ப் உடனடியாக 1974ஆம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் பிரிவு 122இன் கீழ் ஒரு புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்ர். இதன் மூலம் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் கூடுதலாக 10% வரி விதிக்கப்பட்டது. உலக நாடுகளுக்கு விதித்த புதிய 10% வரி விதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில் இந்தியாவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் உறுதி அளித்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் இறக்குமதி வரிகளை 10% இருந்து 15%மாக உயர்த்துவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் மூலம் உலக நாடுகள் மீண்டும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இது குறித்து தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது, ‘வரிகள் தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அபத்தமான, மோசமான மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான முடிவை முழுமையாக ஆய்வு செய்த பிறகு அமெரிக்க அதிபரான நான் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறேன். பல தசாப்தங்களாக தண்டனையின்றி அமெரிக்காவை சுரண்டி வரும் நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10% உலகளாவிய இறக்குமதி வரியை, 15% அளவிற்கு உடனடியாக உயர்த்துவதாக இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த சில மாதங்களில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரிகளை தீர்மானித்து வெளியிடுவோம். இது அமெரிக்காவை மீண்டும் ஒரு சிறந்த நாடாக மாற்றும். எங்களது மகத்தான வெற்றிகரமான செயல்முறையை முன்பை விட இன்னும் வலிமையாக தொடர செய்யும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisment