காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு தான் காரணம் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டிருந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது.
மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் மே 10ஆம் தேதி மாலை 5 மணியளவில் தாக்குதலை நிறுத்தப்படுவதாக அறிவித்தது. இதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது. இதற்கிடையில் இந்த தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா தான் என்றும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? என்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். டிரம்ப்பின் கூற்றை இந்தியா மறுத்தபோதிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 21ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயரை உச்சரிக்காமலே இந்த தாக்குதலை எந்த உலக தலைவரும் நிறுத்தவில்லை என்று கூறினார். பிரதமர் மோடி டிரம்ப்பின் பெயரை உச்சரிக்காமல் மோதலை யாரும் நிறுத்தவில்லை என்று கூறிய அடுத்த நாளே, இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது நான் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 30வது முறை கூறினார். இதனையடுத்து டிரம்ப்பின் பெயரை ஏன் பிரதமர் மோடி உச்சரிக்கவில்லை என்றும், டிரம்ப் பொய் பேசுகிறார் என பிரதமர் மோடி ஏன் சொல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை தலையிட்டு தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து டிரம்ப் தனது சமூகவலைத்தளப் பதிவில், “இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து-கம்போடியா, காங்கோ மற்றும் ருவாண்டா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையேயான மோதல்களை தான் தலையிட்டு தீர்த்து வைத்ததால், அவை நிறுத்தப்பட்டன. மேலும் நான் நிறைய போர்களைத் தீர்த்து வைத்தேன். ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு போரை முடித்து வைத்தேன் என்று நினைக்கிறேன். ஆனால், உங்களுக்குத் தெரியும், நாங்கள் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல் விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீண்டும் இவ்வாறு கருத்து கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.