ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டத்தின் (UNGA) நியூயார்க்கில் நேற்று (23-09-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, சீனா என அனைத்து தரப்பையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இது குறித்து டிரம்ப் பேசியதாவது, “ஏழு மாத காலத்திற்குள், இந்தியா - பாகிஸ்தான் போர் உள்ளிட்ட ஏழு முடிவற்ற போர்களை நான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். நான் 7 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். அனைத்து சந்தப்பங்களிலும் அந்த போர்கள் சீற்றத்துடன் இருந்தன, எண்ணற்ற ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். வேறு எந்த ஜனாதிபதியோ அல்லது தலைவரோ இதுவரை இதற்கு அருகில் கூட எதையும் செய்யவில்லை.
ஐ.நா இவற்றை செய்வதற்கு பதிலாக நான் செய்ய வேண்டியிருந்தது மிகவும் மோசமானது. துரதிர்ஷ்டவசமாக ஐ.நா இதற்கு எதற்கும் உதவ முயற்சிக்கவில்லை. நான் 7 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். ஒவ்வொரு நாட்டின் தலைவர்களையும் கையாண்டேன். ஆனால், ஐ.நாவிடமிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு கூட வரவில்லை. வெற்று வார்த்தைகள் போர்களைத் தீர்க்காது. இந்த போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கண்டிப்பாக கிடைக்க வேண்டும். அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய விரும்பும் புகலிடம் தேடுபவர்களுக்கு ஐ.நா உதவுகிறது. இதனை ஐ.நா நிறுத்த வேண்டும். ஐ.நா படையெடுப்புகளை உருவாக்கக்கூடாது, அவற்றுக்கு நிதியளிக்கக்கூடாது” என்று பேசினார்.
மேலும் அவர், “ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து வாங்குவதன் மூலம் சீனாவும் இந்தியாவும் நடந்து வரும் உக்ரைன் போருக்கு முதன்மையான நிதியுதவி அளிப்பவையாக இருக்கிறது. ஆனால் மன்னிக்க முடியாதபடி, நேட்டோ (NATO) நாடுகள் கூட ரஷ்ய எரிசக்தியையும் ரஷ்ய எரிசக்தி தயாரிப்புகளையும் முழுமையாக நிறுத்தவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் இதைக் கண்டுபிடித்த போது எனக்கு மகிழ்ச்சி இல்லை. அவர்கள் தங்களுக்கு எதிராகவே போருக்கு நிதியளிக்கிறார்கள். அதைப் பற்றி யார் கேள்விப்பட்டிருக்கிறார்கள்? ரஷ்யா ஒரு சமாதான ஒப்பந்தத்தை எட்டத் தயாராக இல்லை என்றால் வாஷிங்டன் மிகவும் வலுவான சுங்க வரிகளை விதிக்க தயாராக உள்ளது. இது ரத்தக்களரியை மிக விரைவாக நிறுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த வரிகள் பயனுள்ளதாக இருக்க, ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.