அமெரிக்காவிற்கு நிறைய வரி பற்றாக்குறை இருப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு உலக நாடுகளுக்கு வரியை விதித்தார். அதன்படி, இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார்.

Advertisment

இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையால், பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தன. வரிவிதிப்புகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்தன. இதன் மூலம், உலகில் இருக்கும் தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இதனிடையே, டிரம்ப் விதித்த வரிவிதிப்பு நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்காவில் பல மாகாணங்களில் பல வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisment

இந்த நிலையில், சீனா உள்ளிட்ட உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரிவிதிப்பு செல்லாது என அமெரிக்கா உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானது என்றும், எமர்ஜென்சியை பயன்படுத்தி வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் கிடையாது என்றும் கூறி அவர் விதித்த வரி விதிப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். ஒன்பது நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வில், 6 நீதிபதிகள் டிரம்பின் வரிவிதிப்புக்கு எதிராக வாக்களித்தனர். இதன் மூலம், டிரம்ப் விதித்த வரி ரத்து செய்யப்பட்டது.

உலக நாடுகள் மீது தன்னிச்சையாக விதித்திருந்த வரிகள் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த சில மணி நேரங்களிலேயே உச்ச நீதிமன்றத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உலகளாவிய புதிய வரிவிதிப்பை டிரம்ப் அதிரடியாக அமல்படுத்தியுள்ளார். நீதிமன்ற தடையால் ஏற்பட்ட சட்டப்பூர்வ தோல்வியை தொடர்ந்து, டிரம்ப் உடனடியாக 1974ஆம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் பிரிவு 122இன் கீழ் ஒரு புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும். இந்த 10% வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ள டிரம்ப், உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் கூறியதாவது, “நீதிமன்றத்தின் சில உறுப்பினர்களைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன். நமது நாட்டிற்கு சரியானதைச் செய்ய தைரியம் இல்லாததற்கு முற்றிலும் வெட்கப்படுகிறேன். அவர்கள் தீவிர இடது ஜனநாயகக் கட்சியினருக்கும் முட்டாள்களாகவும், கையாட்களாகவும் இருக்கிறார்கள்” என்று காட்டமாக விமர்சித்தார். உலக நாடுகளுக்கு விதித்த புதிய 10% வரி விதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில் இந்தியாவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களின்படி 50% இருந்து 18%மாக குறைக்கப்பட்ட வரி ஒப்பந்தம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இதில் எந்தவித மாற்றமும் இருக்காது, இந்தியா மீது அமெரிக்க எந்தவித புதிய வரியை விதிக்காது என்றும் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.