கிரீன்லாந்து என்பது டென்மார்க் கீழ் இருக்கும் சுயாட்சி பெற்ற ஒரு பகுதியாகும். இதன் மக்கள் தொகை மிகக் குறைவு எனினும் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாகும். அதே சமயத்தில்,  கிரீன்லாந்து அமைந்துள்ள இடம் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது.

Advertisment

இந்த சூழ்நிலையில், கடந்த சில காலமாகவே கிரீன்லாந்து மீது அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது. ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து தேவைப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். டிரம்பின் இந்தக் கருத்துக்கு கிரீன்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தபோதிலும் டிரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார். மேலும், கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்காக அமெரிக்காவின் ராணுவத்தைப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக ட்ரம்ப் கூறியிருந்தார். ட்ரம்ப் கூறியது போல் கிரீன்லாந்தில் அமெரிக்கப் படைகள் இறங்கினால் அது சர்வதேச அளவில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்.

Advertisment

டிரம்ப்பின் கருத்துக்களால் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என உலக நாடுகள் உற்றுக் கவனிக்க தொடங்கியுள்ளன. இதுபோன்ற பேச்சுகள், நேட்டோ அமைப்பின் எதிர்காலம் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய நாடுகள் வேதனைத் தெரிவித்துள்ளன. தற்போது அமெரிக்க ராணுவம் கிரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிப்பது, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் கூட்டணிக்கே எதிராக அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கிரீன்லாந்து தீவின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்குக் கணிசமான அளவுக்கு நேட்டோ ராணுவ வீரர்களை நிரந்தரமாக நிலைநிறுத்தத் திட்டமிட்டு வருவதாக டென்மார்க் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், சில ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை கிரீன்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளன. இப்போது முதல் கட்டமாக ஐரோப்பிய வீரர்கள் கிரீன்லாந்திற்குச் சென்று சேர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார தடைகள், வரி அதிகரிப்பு, ராணுவம் போன்ற மிரட்டல்களால் இன்னொரு நாட்டின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய துடிக்கும் அமெரிக்காவின் செயல் ஏற்கத்தக்கதல்ல என்றும் பல நாடுகள் விமர்சித்து வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், கிரீன்லாந்தை கைப்பற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடுதலாக வரி விதித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது சோசியல் தளமான சோசியல் ட்ரூத் பக்கத்தில், “டென்மார்க், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்கு பல ஆண்டுகளாக நாங்கள் கட்டணங்களோ அல்லது வேறு எந்த வகையான ஊதியத்தையும் வசூலிக்காமல் மானியம் வழங்கி வருகிறோம். இப்போது ​​நூற்றாண்டுகளுக்குப் பிறகு, டென்மார்க் திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் இது. உலக அமைதி ஆபத்தில் உள்ளது. சீனாவும் ரஷ்யாவும் கிரீன்லாந்தை விரும்புகின்றன, மேலும் டென்மார்க் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. தற்போது அவர்களிடம் இரண்டு நாய்கள் பாதுகாப்புக்காக உள்ளன, ஒன்று சமீபத்தில் சேர்க்கப்பட்டது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா மட்டுமே இந்த விளையாட்டில் விளையாட முடியும், அதுவும் மிகவும் வெற்றிகரமாக. குறிப்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த உலகமும் ஆபத்தில் இருப்பதால், இந்த புனித நிலத்தை யாரும் தொட மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகியவை அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்கு பயணம் செய்துள்ளன. இது நமது கிரகத்தின் பாதுகாப்பு மற்றும் உயிர்வாழ்வுக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலை.

இந்த மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடும் இந்த நாடுகள், தாங்க முடியாத அல்லது நிலையானதாக இல்லாத ஒரு அளவிலான ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க, இந்த ஆபத்தான சூழ்நிலையை விரைவாகவும், கேள்வியின்றியும் முடிவுக்குக் கொண்டுவர வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம். எனவே, பிப்ரவரி 1, 2026 முதல், மேற்கூறிய அனைத்து நாடுகளுக்கும் (டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து) அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் எந்தவொரு மற்றும் அனைத்து பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும். ஜூன் 1, 2026 முதல், வரி 25% ஆக அதிகரிக்கப்படும். கிரீன்லாந்தின் முழுமையான கொள்முதல் தொடர்பான ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்த வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.