Trump deal wins and ceasefire at israel gaza issue
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடும் தாக்குதலை நடத்தி இஸ்ரேலியர்கள் உட்பட 200க்கும் அதிகமானோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தியது. இதனால் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வந்தது. இந்த தாக்குதலில், 18,500க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 64,700க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கை மிக மோசமான கட்டத்தை எட்டியதால் காசாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் அடிப்படைத் தேவையான உணவு, இருப்பிடம், உடை ஆகியவைகள் இல்லாமல் நாள்தோறும் தவித்து வருகின்றனர். குழந்தைகள் உட்பட பலரும் உணவுக்காக கையேந்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் உலுக்கியது. உணவின்றி தவித்து வருவதால், லட்சத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்கள் இரவு பகலென்று பாராமல் தங்களது நாட்டை விட்டு வெளியேறி வருகின்றர். இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் நியூயார்க் பிரகடனத்திற்கு ஆதரவான ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்து இருக்கின்றன. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது, காசாவில் உடனடி போர் நிறுதத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட இந்த தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இது ஒருபுறமிருக்க காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை எதிர்த்து உலகில் உள்ள பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அமைதி பேச்சுவார்த்தைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து நடத்தி வந்தார். அதன்படி, போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்தார். அதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. முதற்கட்டமாக ஹமாஸ் மீது நடத்தி வந்த குண்டுவெடிப்பு தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தியது.
இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, “இஸ்ரேலும் ஹமாஸும் நமது அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதன் பொருள் அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். மேலும் வலுவான, நீடித்த மற்றும் நிரந்தரமான அமைதியை நோக்கிய முதல் படிகளாக இஸ்ரேல் தங்கள் படைகளை எல்லை கோட்டில் இருந்து திரும்ப பெறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். அரபு மற்றும் முஸ்லிம் உலகம், இஸ்ரேல், சுற்றியுள்ள அனைத்து நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கும் இது ஒரு சிறந்த நாள். இந்த வரலாற்று நிகழ்வை நிகழ்த்த எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்று கூறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.