நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கோலகலமாகவும், விமர்சையாகவும் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். மேலும், கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டு கொண்டனர்.
இந்தியா மட்டுமல்லாது, உலகமெங்கும் வாழும் இந்தியர்கள் இந்த தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (21-10-25) வெள்ளை மாளிகையில் விளக்குகளை ஏற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். தனது நிர்வாகத்தில் உள்ள இந்திய - உறுப்பினர்கள் மற்றும் சமூக பிரமுகர்களுடன் இந்த நிகழ்வை அவர் கொண்டாடினார். தீபாவளி பண்டிகையை குறிக்கும் வகையில் முன்னால் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேஜையில் ஒரு பாரம்பரிய பித்தளை ஐந்து திரி விளக்கு இருந்து. அந்த விளக்கை டொனால்ட் டிரம்ப் ஏற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டொனால்ட் டிரம்ப், ‘இந்த விளக்கு இருளின் மீது ஒளியின் வெற்றி, அறியாமையின் மீது அறிவு மற்றும் தீமையின் மீது நன்மையின் வெற்றி என்பதைக் குறிக்கிறது. இந்திய மக்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவிற்கு சற்று முன்பு நான் இன்று உங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். நாங்கள் ஒரு சிறந்த உரையாடலை நடத்தினோம். வர்த்தகம் பற்றிப் பேசினோம்.
நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசினோம், ஆனால் பெரும்பாலும் வர்த்தக உலகம் பற்றி. அவர் அதில் மிகவும் ஆர்வமாக உள்ளார். நாங்கள் சிறிது நேரத்திற்கு முன்பு பாகிஸ்தானுடன் எந்தப் போர்களையும் நடத்தக்கூடாது என்று பேசினோம். வர்த்தகம் சம்பந்தப்பட்டது என்ற உண்மையை நான் நினைக்கிறேன், அதைப் பற்றி என்னால் பேச முடிந்தது. பாகிஸ்தானுடனும் இந்தியாவுடனும் எங்களுக்கு எந்தப் போர் இல்லை. அது மிகவும், மிகவும் நல்ல விஷயம். மோடி ஒரு சிறந்த மனிதர், ஒரு சிறந்த நண்பர்” என்று கூறினார்.