கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலகையே கலங்கடித்து வருகிறார். குறிப்பாக ஒப்பதங்களுக்கு ஒத்துழைக்காத இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு வரி விதிப்பு நடவடிக்கை, சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து போன்ற அதிரடி உத்தரவுகளை அறிவித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளார். ஏற்கனவே ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினி, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய 12 நாடுகளுக்கு அமெரிக்காவில் நுழைய டிரம்ப் அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிரியா, புர்கினா பாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான், லாவோஸ், சியரா லியோன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். இதற்கான பிரகடனப் பத்திரத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்ட எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. மேலும் வெனிசுலா, நைஜீரியா, ஜிம்பாப்வே மற்றும் பிற நாடுகளுக்கு பகுதி நேரக் கட்டுப்பாடுகளையும் டிரம்ப் விதித்துள்ளார். 

Advertisment

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாலஸ்தீனத்தால் வழங்கப்பட்ட பயண ஆவணங்களைக் கொண்ட நபர்கள் மீதும் முழுமையான கட்டுப்பாடுகளையும் நுழைவுத் தடைகளையும் விதித்துள்ளது. குடியேறாதோருக்கான விசாக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்ட போதிலும், துர்க்மெனிஸ்தான் நாட்டினர் அமெரிக்காவில் குடியேறுவதற்கு அமெரிக்க அரசாங்கம் விதித்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.