Trucks that stole gravel - caught by the district magistrate Photograph: (pudukottai)
புதுக்கோட்டை மாவட்டத்தில் மண், மணல், கிராவல் உள்ளிட்ட கனிவளங்கள் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக அதிகமாக கொள்ளை போவது குறித்து ஏராளமான புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் கனிமவளத்துறை அனுமதி பெறாமல் ஆலங்குடி தாலுகாவில் அரயப்பட்டி, வெண்ணாவல்குடி, கே.வி.கோட்டை உள்பட பல ஊர்களில் கிராவல் மண் வெட்டி டாரஸ் லாரிகளில் போலி பர்மிட்களுடன் ஆலங்குடி பிரதான சாலைகளில், தாலுகா அலுவலகம் வழியாகவே கடத்தப்பட்டு ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான லோடு கிராவல் கொட்டப்படுவது குறித்து படங்கள் ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் நேரில் தெரிவித்தோம்.
கனிம கொள்ளையை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் இது போல சில இடங்களில் நடக்கிறது அதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய மாவட்ட ஆட்சியர் உடனே கனிம வளத்துறை அதிகாரிகளை அழைத்து நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையடுத்து, கிராவல் திருட்டு நடந்த அரயப்பட்டி, வெண்ணாவல்குடி கிராவல் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த கனிமவளத்துறை அதிகாரிகள் கிராவல் கொள்ளை நடந்திருப்பதை உறுதி செய்து எத்தனை கன மீட்டர் கிராவல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று அளவீடு செய்து அதற்கான அபராதம் விதிக்க கோரி புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யாவிற்கு கனிமவளத்துறை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகார்ககளுக்கு பிறகும் ஆலங்குடி அருகே சிக்கப்பட்டியில் இருந்தும் போலி பர்மிட்டை வைத்துக் கொண்டு கிராவல் கொள்ளை நடந்தது. ஆலங்குடி தாலுகா வருவாய்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தான், மீண்டும் வெண்ணாவல்குடி பகுதியில் கிராவல் டாரஸ் லாரிகள் ஓடுவது குறித்து தகவல் அறிந்து கோட்டாட்சியர் ஐஸ்வர்யா அங்கு சென்று ஆய்வு செய்த போது TN 55 BP 3447 என்ற பதிவு எண் கொண்ட டாரஸ் லாரியில் கிராவல் மண் ஏற்றி வந்த போது நிறுத்தி சோதனை செய்தபோது லாரி ஓட்டுநர் பர்மிட் கிராவல் என்று கூறி பர்மிட்டை காட்ட அது திண்டுக்கல் டூ கோட்டைப்பட்டினம் என்று இருந்தது.
அது போலிப் பரர்மிட் என்பதை உறுதி செய்த கோட்டாட்சியர் ஐஸ்வர்யா லாரியை பறிமுதல் செய்து ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகார் கொடுத்துள்ளார். கோட்டாட்சியர் ஐஸ்வர்யா கொடுத்த புகாரின் பேரில் கிராவல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி உரிமையாளர் அறந்தாங்கி தியாகி சின்னையா தெருவைச் சேர்ந்த ரமேஷ்பாபு மனைவி தமிழ்செல்வி மீது வழக்கு பதிவு செய்து லாரியை காவல் நிலையத்தில் நிறுத்தியுள்ளனர்.
இதேபோல, கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானம் வழியாகச் சென்ற எம் சாண்ட் ஏற்றிச் சென்ற லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது பர்மிட் இல்லாமல் வந்த 2 டிப்பர் லாரிகளை பிடித்து திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதேபோல மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் அடிக்கடி சோதனைகள் செய்தால் மாவட்டத்தில் நடக்கும் கனிமக் கொள்ளைகளை தடுக்கலாம் என்கின்றனர் பொதுமக்கள்.
Follow Us