கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் விவகாரத்தில் தவெக் தலைவர் விஜயின் செயல்பாடுகள் சோசியல் மீடியா உள்ளிட்ட தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் இருப்பது, பிரச்சாரத்துக்கு தாமதமாக வந்தது, தொண்டர்கள் நெரிசலில் சிக்கும்போது கண்டுகொள்ளாமல் இருந்தது குறித்து பொதுமக்களும் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், சோசியல் மீடியாவில் ஊடுருவிய விஜய் ரசிகர்கள் தங்களுடைய தலைவரை விமர்சிப்பவர்களை ஆபாச வார்த்தைகளால் கேவலமாகத் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
இந்த சூழலில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் கடந்த 1-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வெளியானது. அன்றைய தினம் சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் யூடியூபர்கள் பேட்டி எடுத்தனர். மேலும், கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாகவும் ரசிகர்களிடம் கேள்வி கேட்டுள்ளனர்.
அப்போது, திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் தவெக்-உக்கு ஆதரவாக பேசியதோடு, யூடியூபர்களை ஆபாசமாகப் பேசி, மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அங்கிருந்த மைக்கைப் பிடித்துக்கொண்டு தவெக் மீது பொய்யான குற்றச்சாட்டைப் பரப்பும் முதல்வருக்கு மிரட்டல் விடுத்து, ‘நான் தவெக் கட்சிக்காரன் தான், விஜயோட தீவிர ரசிகன். என் ஊர் அரும்பாக்கம், என் அண்ணன் பாலமுருகன் கிட்ட வேலை செய்யுறன். அவர் தவெக் மாவட்ட செயலாளர் முடிஞ்சா என்ன கைது பண்ணுங்கடா’ என வாயை கொடுத்து வம்பில் சிக்கினார்.
இந்த காட்சி அனைத்தும் வீடியோவில் சிக்கிய நிலையில் அதை ஆதாரமாக வைத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு சவால் விட்ட தவெக் நிர்வாகியை கைது செய்வதற்கு கோயம்பேடு எஸ்.யுவராஜ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாகத் தேடியபோது, தவெக் நிர்வாகி போலீசாருக்கு பயந்து வீட்டுக்குக் கூட வராமல் தலைமறைவானார். அவரது செல்போன் நம்பரை கண்டுபிடித்து டவர் மூலம் தொடர்ந்து கண்காணித்தபோது, சென்னை வளசரவாக்கம் பகுதியில் இருப்பதைக் காட்டியது. அதன்படி, அதிகாலை 4.30 மணியளவில் நண்பர்கள் வீட்டில் பதுங்கியிருந்த தவெக் நிர்வாகியை கைது செய்து கோயம்பேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தவெக் உறுப்பினர் கோகுல் என்பதும், அதே பகுதியில் உணவு டெலிவரி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
அப்போது, போலீசிடம் சிக்கிய கோகுல், "நான் தெரியாமல் அப்படி பேசிவிட்டேன். இனி இதுபோல் தவறு செய்யமாட்டேன். என்னை விட்டுவிடுங்கள்" என கண்ணீர் விட்டு கதறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட கோகுல் மீது ஆபாசமாகப் பேசுதல், கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.