பாரம்பரியம் மற்றும் இரக்ககுணம் ஆகியவற்றின் கலவை எனக் குறிப்பிடும்  வகையில், நடிகை த்ரிஷா கிருஷ்ணனும் சென்னையைச் சேர்ந்த பீப்பிள் ஃபார்  கேட்டில் இன் இந்தியா (PFCI) அமைப்பும் இணைந்து, கஜா என்று பெயரிடப்பட்ட இயற்கை வடிவிலான இயந்திர யானை ஒன்றை, அருப்புக்கோட்டியில் உள்ள  ஸ்ரீஅஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீஅஷ்டபுஜ ஆதிசேஷ  வராகி அம்மன் கோவில்களுக்கு தானமாக வழங்கியிருக்கின்றனர்.

இந்நிகழ்வின் மூலம், மதுரை மண்டலத்திலும் ஒட்டுமொத்த விருதுநகர் மாவட்டத்திலும் கோவில் ஒன்றில் மதச் சடங்குகள் மற்றும்  விழாக்களின்போது இயந்திர யானையைப் பயன்படுத்துவது முதன்முதலாக  நடைமுறைக்கு வந்துள்ளது. மிகுந்த கவனத்துடன் கஜா இயந்திர யானை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது  உயிருள்ள நிஜ யானைகளைப் பயன்படுத்தும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக,  ஒரு மனிதாபிமான மாற்றாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு,  இரிஞ்சாடப்பில்லி ராமன் என்று பெயரிடப்பட்ட உலகின் முதல் இயந்திர யானையை, கேரளாவிலுள்ள கோவிலில் PETA இந்தியா அறிமுகப்படுத்தியது.

91

Advertisment

விலங்குகளின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் த்ரிஷா. விலங்குகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் பொருட்டு PETA  இந்தியா மற்றும் ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றிவரும் த்ரிஷா, “இந்த அழகிய தருணத்தில் நானும் ஓரு  அங்கமாக இருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்..” என்று உற்சாகமாகக் கூறும்  அவர்  “கருணையில் வேரூன்றியிருக்கும்போது பக்தி இன்னும் பிரகாசமாக மிளிர்கிறது. நமது கோவில் மரபுகளின் உள்ளே இந்த இயந்திர யானையை வரவேற்பது, இரக்ககுணம், புதுமை மற்றும் கலாச்சாரத்தின் கொண்டாட்டமாகும். எந்தத் தீங்கும் விளைவிக்காத வகையில், நல்லிணக்கத்தை மட்டுமே உறுதிப்படுத்தி நமது பாரம்பரியத்தை நாம் கௌரவிக்கிறோம்.  முன்னேற்றத்தின்  பெருமைமிக்க அடையாளமாகத் திகழும் இச்செயலில், நம்பிக்கையும்  பச்சாதாபமும் கைகோர்த்துச் செல்கின்றன. அன்பு என்ற ஒன்று மட்டுமே நமது சடங்குகளை வழிநடத்தும்படியான எதிர்காலத்தை தழுவ,  இது இன்னும் பலரை  ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். பாரம்பரியம் என்ற பெயரால் எந்த உயிரினமும்  பாதிக்கப்படாது என்பதை இது உறுதிசெய்யும்.” என்கிறார்.

மேற்கண்ட அருப்புக்கோட்டை கோவில்களின் குடமுழுக்கு விழாவின்  மங்களகரமான சந்தர்ப்பத்தில், கஜா இயந்திர யானையின் அறிமுக  நிகழ்ச்சியானது, பாரம்பரிய மங்கள வாத்தியத்துடன் கொண்டாடப்பட்டது. இது  பாரம்பரியம் மற்றும் நெறிமுறை முன்னேற்றம் ஆகியவற்றின் இணக்கமான  கலவையைக் குறிப்பதாக உள்ளது. உயிருள்ள நிஜ யானைகளை வாங்குவதோ அல்லது பணிக்கு அமர்த்துவதோ  இல்லை என்ற கோவில் நிர்வாகங்களின் முடிவு, கொடுமையற்ற மத  நடைமுறைகளை நோக்கிய பரந்த இயக்கத்தைப் பிரதிபலிக்கிறது.  எனவே இந்த  முடிவை அங்கீகரிக்கும் விதமாக PFCI இந்த நன்கொடைக்கு உதவியுள்ளது.

93

Advertisment

தொழில்நுட்பத்தை பாரம்பரியத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம்  இக்கோவில்கள் கருணைமிக்க வழிபாட்டிற்கு ஓரு முன்னுதாரணமாகத்  திகழ்கின்றன. மேலும், மற்றவர்களும் இதைப் பின்பற்ற ஊக்குவிக்கின்றன.  PFCI-யின் நிறுவனர் அருண் பிரசன்னா   “கோவில் சடங்குகளில் இயந்திர  யானைகளை அறிமுகப்படுத்துவது,  நமது கலாச்சார மற்றும் ஆன்மீக  நடைமுறைகளின் புனிதத்தைப் பாதுகாக்கும். அதே வேளையில், கோவில்  யானைகள் படும் துன்பத்தையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஓர்  அர்த்தமுள்ள படியாகும். பக்தியும் அனைத்து உயிரினங்களுக்குமான கண்ணியமும் அழகாக இணைந்து இருக்கமுடியும் என்பதை இந்த கஜா  எடுத்துக்காட்டுகிறது."  என்று கூறுகிறார்.

இயந்திர யானைகளை ஏற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு தொழில்நுட்ப தீர்வாகும்.  இது ஒரு அர்த்தமுள்ள, இரக்ககுணம் நிறைந்த மாற்றமாகும். இது  பாரம்பரியத்தையும் மதிக்கிறது. அதே நேரத்தில் இந்த கம்பீரமான உயிர்கள் அமைதியாக எதிர்கொண்டுவரும் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் உதவுகிறது.” என கூறும் PFCI  வேதனையுடன் ஒரு தகவலைப் பகிர்கிறது.

92

‘கடந்த ஆண்டு, ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு  நாச்சியார் (ஆண்டாள்) கோவிலுக்கு இதேபோன்ற இயந்திர யானையை  நன்கொடையாக வழங்க PFCI முன்வந்தது.  கோவில் யானையான ஜெய்மால்யதாவுக்கு  மறுவாழ்வளிக்கவும்,  நீண்டகாலப்  பராமரிப்புக்காகவும்  ஓரு புகழ்பெற்ற சரணாலயத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற முறையான  வேண்டுகோளுடன்,  இந்த இரக்ககுணம் நிறைந்த நன்கொடை குறித்த விபரங்கள் அக்கோவில் நிர்வாகத்தின் முன்வைக்கப்பட்டது. சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஜெய்மால்யதா யானை பல்வேறு சமயங்களில் அடித்து துன்புறுத்தப்பட்டது தொடர்பான பல்வேறு அறிக்கைகள் மற்றும் காணொலிகள் வெளியானதையடுத்து, அவள் நாடு முழுவதும் பேசுபொருளானாள். இது  பொதுமக்களிடம் மிகப்பரவலான எதிர்ப்பைச் சம்பாதித்தது. மேலும் அவளது  விடுதலைக்கான கோரிக்கையும் வலுப்பெற்றது. இருப்பினும் PFCI முயற்சித்தபோதிலும், ஜெய்மால்யதாவின் அவலநிலை குறித்து தேசிய அளவில் கவனம் அதிகரித்து வந்தபோதிலும், இந்தத் திட்டம் தொடர்பாகவோ  அல்லது யானையின் நலன் குறித்தோ,  கோவில் அதிகாரிகளிடமிருந்து எவ்வித  அதிகாரப்பூர்வமான பதிலோ தகவலோ கிடைக்கப்பெறவில்லை.’ என்கிறது.   

ஆக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருக்கவேண்டிய இயந்திர  யானை கஜா, அருப்புக்கோட்டை கோவில்களில் கம்பீரமாகச் செயல்படத்  தொடங்கியுள்ளது.