திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில், கோவிலுக்குள் அமைச்சர் சேகர்பாபுவுடன் திரிசுதந்திரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 7-ம் தேதி குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தக் குடமுழுக்கு விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்ததாகக் கூறப்படுகிறது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவ்வப்போது கோவிலுக்கு வருகை தந்தார். மேலும், குடமுழுக்கு நாளுக்கு முந்தைய தினம், கனிமொழி எம்.பி.யுடன் இணைந்து கோவிலுக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, குடமுழுக்கு நாளில் அதிகாலையில் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். கோவிலுக்குள் சென்ற அமைச்சருடன், கோவிலில் பணியாற்றும் திரிசுதந்திரர்கள் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  அந்த வீடியோவில், திரிசுதந்திரர்கள் அமைச்சரை நோக்கி கை நீட்டி கடுமையாக வாக்குவாதம் செய்வது போலவும், அதே நேரத்தில் அமைச்சரும் அவர்களை நோக்கி கை நீட்டி பேசுது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து விளக்கம் கேட்டபோது, “புனித நீர் கலசத்தை மேலே கொண்டு செல்லும்போது, மேல் தளத்திற்கு அதிக எண்ணிக்கையில் திரிசுதந்திரர்கள் ஏற முயற்சித்துள்ளனர். அப்போது, மேல் தளத்திற்கு எத்தனை பேர் செல்லலாம் என முன்பே வரையறுக்கப்பட்டிருந்தது. இதனால், ஏன் அனைவரும் மேலே செல்கிறீர்கள்? என அமைச்சர் கேட்டதாகவும், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

Advertisment

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி