பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வுகளும் நடந்துள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூரில் அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களிடம் போக்குவரத்து காவலர் ஒருவர் சாக்லேட் கொடுத்து படியில் தொங்கக் கூடாது என அறிவுறுத்திய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

வெளியான வீடியோவில், மாணவர்களிடம் 'இனி படியில் தொங்கக்கூடாது' என அறிவுறுத்திய போக்குவரத்து காவலர் பள்ளி சிறுவர்களுக்கு சாக்லேட்டை கொடுத்தார். காலை தரையில் தேய்த்துக்கொண்டு போவது உங்களுக்கு நன்றாக இருக்கிறதா? படியில் பயணம் நொடியில் மரணம் என ஏற்கனவே சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஏகப்பட்ட பேர் இப்படி ஆபத்தாக பயணம் செய்து இறந்திருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும் பேருந்தை பத்திரமாக இயக்க வேண்டும் என அறிவுறுத்தி ஓட்டுநருக்குச் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு 'பேருந்து ஓட்டும் பொழுது மது அருந்தக்கூடாது. மது அருந்துவதாக இருந்தால் நைட்டு உங்களுடைய ஓன் டைமில் அடித்துக் கொள்ளுங்கள். நிறைய பேரை சோதனை செய்து வருகிறோம். நேற்று மட்டும் ஆறு பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி சிக்கினார்கள். பேருந்தையும் செக் பண்ணுகிறோம். உங்க பிரண்ட்ஸ் சார்கிலில் சொல்லுங்கள்' என்றார்.