கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக கடந்த 2023 ஆண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணியில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய மாநாட்டு கட்சி (என்.சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. ஆரம்பக் கட்டத்தில் இந்த கூட்டணிக்கு மக்களிடம் இருந்து பெரும் ஆதரவு இருந்த நிலையில், இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தார். அதன் பிறகு, பல கட்டங்களாக கூட்டங்கள் நடத்தி இந்தியா கூட்டணி, மக்களவைத் தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தோல்வியைச் சந்தித்தது.
இதனையடுத்து நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. இந்த தொடர் தோல்விகள், அந்த கூட்டணி தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ஆம் ஆத்மி, பிப்ரவரியில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலை தனித்து நின்று சந்தித்தது. இந்த தேர்தல் பரப்புரையின் போது ஆம் ஆத்மியும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டை வைத்து வந்தனர். இதன் எதிரொலியாக, அந்த தேர்தலில் ஆம் ஆத்மி அரசை வீழ்த்தி பா.ஜ.க வெற்றி பெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது என்பது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே தொடர் தோல்விக்கு காரணம் என அரசியல் நோக்கர்கள் மட்டுமல்லாமல் கூட்டணி தலைவர்களே அதிருப்தி தெரிவித்து வந்தனர். இதற்கிடையே, இந்தியா கூட்டணியை தலைமை தாங்க தயாராக இருப்பதாக என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இது இந்தியா கூட்டணியில் பேசுபொருளாக மாறியது. மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கு, இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, சரத் பவாரின் சரத்சந்திர பவார் மற்றும் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.கவுடன் நெருக்கமாக இருப்பதாக கருதப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கூட, இந்தியா கூட்டணியை தலைமை தாங்குவதற்கு மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளித்தது. இது காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 6 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகள் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி, மகாகத்பந்தன் கூட்டணி மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் பெரும் அதிருப்தியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில், கூட்டணியின் தலைமைப் பதவியை சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கேட்பதால் இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ ரவிதாஸ் மேஹோத்ரா கூறுகையில், “இந்தியா கூட்டணியை அகிலேஷ் யாதவ் தலைமை ஏற்க வேண்டும். நிர்வாக வலிமையும், மக்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் சமாஜ்வாதி கட்சி கொண்டுள்ளது. மக்களவையில் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், மக்களவையில் 3வது பெரிய கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ளது. கட்சியில் பெரும்பாலானோர் இதே கருத்தை தான் கொண்டிருக்கின்றனர்” என்று கூறினார்.
முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் கூட்டணிக்கு தலைமை ஏற்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான கல்யாண் பானர்ஜி தெரிவித்திருந்தார். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் தலைமைப் பதவியை, திரிணாமுல் காங்கிரஸும், சமாஜ்வாதி கட்சிகளும் கேட்பதால் அக்கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/18/indialliance-2025-11-18-17-46-57.jpg)