திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததால் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான சட்டக்கல்லூரி மாணவி ஒருவரை, 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 25ஆம் தேதி தேர்வு தொடர்பான படிவங்களை நிரப்புவதற்காக தான் படித்து வந்த தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரிக்கு வந்த மாணவியை, அதே கல்லூரியின் முன்னாள் மாணவரும், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் பிரிவான திரிணாமுல் காங்கிரஸ் சத்ரா பரிஷத்தின் தெற்கு கொல்கத்தா மாவட்ட பிரிவின் பொதுச் செயலளருமான மோனோஜித் மிஸ்ரா (31), தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் ஜைப் அகமது மற்றும் பிரமித் முகர்ஜி ஆகியோருடன் சேர்ந்து பாதுகாவலர் அறைக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மோனோஜித் மிஸ்ரா, ஜைப் அகமது மற்றும் பிரமித் முகர்ஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் அக்கல்லூரியின் காவலாளியும் கைது செய்யப்பட்டுள்ளார். பலமுறை அப்பெண் உதவி கேட்டும் பாதுகாப்பு அளிக்க தவறியதாக காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் பொதுச்செயலாளர் என்பதால் இந்த வழக்கு மேற்குவங்கத்தில் அரசியல் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான மதன் மித்ரா, கட்சித் தலைமையிடன் மன்னிப்பு கேட்டுள்ளார். சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்துப் பேசிய மதன் மித்ரா, “அந்த பெண் தனியாக அங்கு சென்றிருக்காவிட்டால், இது நடந்திருக்காது. அந்த பெண், தனது நண்பர்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டும், பெற்றோரிடம் தெரிவித்திருக்க வேண்டும். இல்லையென்றால், கட்சி ஊழியர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். இதனை சொல்லாவிட்டால், குற்றம் சாட்டப்பட்ட நபர் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டார். கல்லூரி மூடப்பட்டிருப்பதை அந்த பெண் அறிந்திருக்கிறார்” என்று கூறினார். இவரின் கருத்துக்கள், அம்மாநிலத்தில் சர்ச்சையானது. அவருக்கு பொதுமக்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கட்சியின் மாநிலத் தலைவர், சுப்ரதா பஷி, இந்த விவகாரம் குறித்து மதன் மித்ராவுக்கு காரணம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த மதன் மித்ரா, தான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தற்போது அவரது பதிலை மறுபரிசீலனை செய்து வருகிறது.