மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்தாண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். மருத்துவ மாணவியின் கொடூரக் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை, சி.பி.ஐ தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் நீதிமன்றம், தாமாக முன்வந்து பெண் மருத்துவர் கொலைத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோச்ஜ், காவல் அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் உள்ள சியல்டா மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவர் பிரதான குற்றவாளி தான் என கடந்த ஜனவரி 18ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, சஞ்சய் ராய்க்கு சாகும் வரை சிறையில் அடைத்து ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சஞ்சய் ராய்க்கு ரூ.50,000 அபராதம் விதித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டது.
இதனிடையே, தனக்கும் தனது மனைவியின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் எழுதினார். இதையடுத்து, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மின்னஞ்சலை மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவர் மாளிகளி அண்மையில் அனுப்பியது. இருப்பினும், அந்த புகார் குறித்து இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதால் இந்த மாத தொடக்கத்தில் ‘நபன்னா அபியான்’ என்ற போராட்ட ஊர்வலம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின் போது, இந்த வழக்கின் விசாரணையை திசைதிருப்புவதற்காக ஆளும் கட்சி தலைவரிடமிருந்து சிபிஐ லஞ்சம் வாங்கியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்கு திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து குணால் கோஷ் கூறுகையில், “ பாதிக்கப்பட்டவரின் தந்தை, தனது மகளின் கொலை தொடர்பான விசாரணையைத் தடம் புரளச் செய்ய ஆளும் கட்சித் தலைவரிடமிருந்து சிபிஐ லஞ்சம் வாங்கியதாக பொய்யாகக் குற்றம் சாட்டியுள்ளார். மற்றவர்களின் தூண்டுதலின் கீழ் அவர் என்ன சொல்ல விரும்புகிறாரோ அதைச் சொல்ல நான் அனுமதிக்க முடியாது. அவர் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் நீதிமன்றத்திற்கு வந்து தனது அறிக்கையை நிரூபிக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, ‘இந்த வழக்கு எங்களை குழப்பும் முயற்சி. நீதிக்காக நாங்கள் போராடும் போராட்டத்தில் இருந்து எங்களை திசை திருப்பும் முயற்சி. இது எங்களை துன்புறுத்தும் முயற்சி, அதற்கு மேல் எதுவும் இல்லை. நான் உயிருடன் இருக்கும் வரை போராட்டம் தொடரும். எனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிக்காக போராடுவேன். நாங்கள் ஜனாதிபதிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினோம். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு எங்கள் மாநில தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஏழு நாட்கள் கடந்துவிட்டன, மாநில அரசிடமிருந்து யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை’ என்று கூறினார்.