பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி இந்த நடவடிக்கை மூலம், சுமார் 66 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது. ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குரிமையை பறிப்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்த திருத்த நடவடிக்கை உள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்த தேர்தல் ஆணையம், வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள், இறந்தவர்களின் பெயர்களைத் தான் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்தது.
இந்த சூழ்நிலையில், அடுத்த வருடம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடந்த 27ஆம் தேதியில் இருந்து திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கால்களை உடைப்பேன் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் நடக்கவிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பாக நேற்று (28-10-25) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள், தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சரும், கொல்கத்தா மேயருமான ஃபிர்ஹாத் ஹக்கீம், “ஒரு உண்மையான வாக்காளரின் பெயர் நீக்கப்பட்டாலும், நாங்கள் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்ப்போம் என்பதை எனது கட்சி சார்பாக நான் தெளிவுபடுத்தியுள்ளேன். வங்காளத்தைச் சேர்ந்த ஒரு உண்மையான நபரின் பெயரைக் கூட நீக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மாநிலத்தில் வரவிருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை குடியுரிமை திருத்தம் சட்டத்துடன் (சிஏஏ) இணைக்க சதி நடக்கிறது. பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து சிஏஏ-வை திணிக்க முயன்றால், நான் அவர்களின் கால்களை உடைப்பேன்” என்று கூறினார். தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கால்களை உடைக்கப் போவதாக மாநில அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/29/far-2025-10-29-14-38-57.jpg)