பீகாரைத் தொடர்ந்து வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் (S.I.R - Special Intensive Revision) தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (01.12.2025) காலை 11 மணியளவில் தொடங்கியது.

Advertisment

அப்போது, தேர்தல் ஆணையம் கொண்டு வந்த எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதே போல், மாநிலங்களவை எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

Advertisment

இந்த நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று (02.12.2025) காலை தொடங்கியது. அதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மல்லிகார்ஜூனா கார்கே, திமுகவைச் சேர்ந்த கணிமொழி எனப் பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்குள் நுழைந்து முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக எம்.பி திருச்சி சிவா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எஸ்.ஐ.ஆர் பணி நெருக்கடியால் இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக எங்களுடைய கோரிக்கைகளோ அல்லது எங்களுடைய கவலைகள் குறித்தோ அரசாங்கம் அக்கறையோடு பதில் சொல்ல வேண்டும். அது அவர்களது கடமை. ஆனால், அவர்கள் எதிர்க்கட்சிகளை மதிப்பதே இல்லை. எங்களை கேட்பதே இல்லை என்பதை விட எங்களை பேசவே அனுமதிப்பதில்லை. இந்த மரபு பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது கவலைக்குரிய ஒன்று. இது குற்றச்சாட்டு அல்ல, வேதனைக்குரிய ஒன்று. உலகின் தலைசிறந்த ஜனநாயக நாட்டில் இப்படி நாடாளுமன்றத்தில் பேச உரிமை இல்லை.

Advertisment

பேச அனுமதி கேட்டு கெஞ்சினால் அமளி செய்வதாக அவதூறு செய்கின்றனர். நாங்கள் எதற்கும் குந்தகம் விளைவிக்கவில்லை. பேச அனுமதி கேட்கிறோம், அனுமதி தாருங்கள் என்று சொல்கிறோம். எங்கள் பிரச்சனைக்கு முன்னுரிமை தந்தால், உங்களுடைய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் நாங்கள் உங்கள் அலுவலகில் பங்கேற்போம். தேர்தல் ஆணையம் இப்போது எடுத்திருக்கிற நடவடிக்கைகள் அது பாராட்டத்தக்க அளவிலோ, ஏற்கத்தக்க அளவிலோ இல்லை என்பதை எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பு இல்லை என்கிற போது வேறு வழி இல்லாத நிலையில் வெளிநடப்பு செய்திருக்கிறோம். பீகாரில் 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட கதை எல்லோருக்கும் தெரியும். அது மாதிரி மற்ற இடங்களில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான் போராடுகிறோம்” என்று கூறினார்.