இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக அது குறித்த சிறப்பு விவாதத்தை மக்களவையில் நேற்று (08-12-25) மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. இந்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உள்ள இருஅவைகளிலும், ஆளுங்கட்சி எம்.பிக்கள், எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் என தொடர்ந்து பேசி வருகின்றனர்.

Advertisment

அதன்படி, மாநிலங்களவையில் வந்தே மாதரம் குறித்த சிறப்பு விவாதத்தில் திமுக எம்.பியான திருச்சி சிவா இன்று (09-12-25) பங்கேற்றுப் பேசினார். அதில் அவர் பேசியபோது, “வட இந்தியாவில் வ.உ.சிதம்பரத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளதா?. போரில் பல தந்திரங்கள் உண்டு. செய்திகள் அனுப்பவதில் பல முறைகள் உண்டு. புறாவின் மூலமாக அனுப்புவார்கள், தூதுவனின் மூலமாக அனுப்புவார்கள், உணவுக்குள் எதையாவது வைத்து அனுப்புவார்கள். அந்த அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும். நாங்களும் நீண்ட காலம் சிறையில் இருந்ததால், அது எங்களுக்கும் தெரியும். அது மாதிரி ஒரு தந்திரமாக எல்லாம் தடை செய்யப்பட்ட காலத்தில் தீரன் சின்னமலைக்கு, ரகசிய குறிப்புகளை அனுப்புவதற்கு வழியில்லாமல் செருப்புக்குள் வைத்து அனுப்பிய ஒரு கமாண்டோ தான் மிஸ்டர். பொல்லான். நான் குறைத்து சொல்லவே இல்லை. அவர் ஒரு கமாண்டோ.

Advertisment

நான் வரலாற்றை அப்படியே சொல்கிறேன். அடுத்து புதிதாக மிதக்கவிடப்படும் போர் கப்பலுக்கு ஐஎன்எஸ் செண்பகராமன் என்று பெயர் வையுங்கள். நாங்களும் சேர்ந்து பாராட்டுகிறோம். நாட்டை விட்டு வெளியேறி விடுதலைக்காக அங்கிருப்பவர்களை எல்லாம் சேர்த்து கொண்டு வந்து போராடி செத்துப் போனார். இதையெல்லாம் பெயராக சொல்லாதீர்கள், நடைமுறையில் காட்டுங்கள். அடுத்து விடப்படும் போர்க்கப்பலுக்கு அவரின் பெயரை வைத்தால் மாண்புமிகு முருகனுக்கு நன்றி சொல்வேன். விடுதலைக்கான எங்களுடைய பங்கு யாருக்கும் குறைவில்லாதது. ஆனால், வரலாற்றில் அது பெருமளவில் மறைக்கப்பட்டது, மறுக்கப்பட்டது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில், நான் குறிப்பிட்ட இவர்களை எல்லாம் கொண்டு வாருங்கள். இவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது உங்களுடைய கடமை, எங்களுடைய கடமையும். இது இந்த நாட்டினுடைய உணர்வு. எல்லா பகுதிகளில் வாழ்ந்த தியாகிகளுக்கு மரியாதை தாருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று கூறினார்.