தனது முதல் சுற்றுப்பயணத்திற்காக இன்று(13/09/2025) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த விஜய் பிரச்சாரத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பேருந்து மூலம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அவரது வாகனத்தை தொண்டர்கள், ரசிகர்கள் பின்தொடர்ந்து ஓடினர். இதனால் பேருந்து ஊர்ந்து சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கட்டுப்பாடுகளை விஜய்யின் ரசிகர்கள் பின்பற்றாத சூழல் ஏற்பட்டுள்ளது.
போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி விஜய்யின் பேருந்தை இருசக்கர வாகனங்களில் ரசிகர்கள் தொடர்ந்தனர். விஜய் உரையாற்றவுள்ள இடத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை இரும்பு கூடத்தின் மீது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விஜய்யின் தொண்டர்கள் ஏறினர். போலீசார் சொல்லியும் கேட்காத நிலை அங்கு பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது. சுமார் நான்கு மணி நேரத்திற்கு பிறகு பரப்புரை செய்ய அனுமதிக்கப்பட்ட பகுதியான மரக்கடை பகுதிக்கு அவருடைய வாகனம் வந்தது.
தொடர்ந்து 7 மணி நேரமாக காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், ''எல்லோருக்கும் வணக்கம். நான் பேசுவது கேட்கிறதா? அந்த காலத்தில் போருக்கு செல்வதற்கு முன்னாடி போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வம் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டுதான் போருக்கு போவார்களாம். அந்த மாதிரி அடுத்த வருடம் நடக்கப் போற ஜனநாயக போருக்கு தயாராகுவதற்கு முன் நம்ம மக்களை, உங்க எல்லாரையும் பார்த்துட்டு போகலாம் என வந்திருக்கிறேன். ஒரு சில மண்ணை தொட்டா நல்லது. சில நல்ல காரியங்களை ஒரு சில இடங்களில் இருந்து தொடங்கினால் நல்லது என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம்.
அந்த மாதிரி திருச்சியில் தொடங்கிய எல்லாமே திருப்பு முனையாக அமையும் என்று சொல்வார்கள். அதற்கு நிறைய எடுத்துக்காட்டு இருக்கிறது. முதலில் அறிஞர் அண்ணா 1956ல் தேர்தலில் நிற்க வேண்டும் என்று நினைத்தது திருச்சியில் தான். அதன் பிறகு எம்ஜிஆர் அவருடைய முதல் மாநில மாநாட்டை நடத்தியதும் திருச்சியில் தான். நான் சொல்வது 1974. அது மாதிரி திருச்சிக்கு என்று நிறைய வரலாறு இருக்கிறது. நமது கொள்கை தலைவர் பெரியார் வாழ்ந்த இடம், மலைக்கோட்டை இருக்கும் இடம், கல்விக்கு பெயர் போன இடம், மதச்சார்பின்மைக்கு பெயர் பெற்ற இடம், கொள்கை உள்ள மண் இது, அது மட்டுமல்ல இன்று உங்கள் எல்லோரையும் பார்க்கும் பொழுது..''. எனப் பேச திரென அவர் பேசிய மைக் வேலை செய்யவில்லை. தொழிநுட்ப கோளாறு காரணமாக அவரது பேச்சைக் கேட்க முடியவில்லை. இதனால் தொண்டர்கள் ''கேட்கவில்லை... கேட்கவில்லை..'' என கூச்சலிட்டனர்.