சிறுநீர் கழிப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்ற போது பழங்குடியின பெண்ணை, மூன்று பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், அங்குல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தனது மருமகனுடன் அங்குலின் செண்டிபாடா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றார். பிற்பகல் 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இருவரும் வீடு திரும்பும் போது பெட்ரோல் போடுவதற்காக பெட்ரோல் பம்ப் அருகே வாகனத்தை நிறுத்தியுள்ளனர். பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த போது, சிறுநீர் கழிப்பதற்காக ஒரு காட்டுப் பகுதிக்குள் பாதிக்கப்பட்ட பெண் நுழைந்துள்ளார்.
அப்போது டிராக்டரில் வந்த மூன்று ஆண்கள் அந்த பெண்ணை சாலையில் இருந்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் அங்கிருந்து தப்பித்து தனது வீட்டிற்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்து புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய டிராக்டர், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் குற்றம் நடந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவரும் அணிந்திருந்த ஆடைகள் உள்ளிட்ட பல குற்றவியல் பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.