தமிழகத்தில் அண்டை மாநில ஆம்னி பேருந்துகளில் தமிழ்நாடு பதிவெண்ணைப் போலியாகப் பயன்படுத்தி ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுவதாக பல்வேறு தொடர் புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் போக்குவரத்து ஆணையர் கெஜலட்சுமி மற்றும் இணை ஆணையர் பாட்டப்பசாமி ஆகியோர் ஆம்னி பஸ்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தனர். அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிருஷ்டியன்பேட்டை தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுமேஷ் தலைமையில் ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வந்த ஆம்னி பேருந்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.
ஆம்னி பேருந்தைச் சோதனை செய்ததில் ஆம்னி பஸ்-ன் சேசிஸ்-இல் (chassis ) இருந்த நம்பரும் பதிவெண் சான்றிதழில் இருந்த சேசிஸ் நம்பரும் வேறுபட்டு இருந்தது. பதிவெண்ணைச் சோதனை செய்தபோது மகாராஷ்டிரா மாநிலம் தாத்ரா நாகர் ஆவேலி என்ற யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது. மேலும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஒருவர் ஆம்னி பஸ்சை விலைக்கு வாங்கி போலியாகத் தமிழக பதிவில் ஸ்டிக்கர் ஒட்டி கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத் தினமும் ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலைக்குப் பயணிகளை ஏற்றி வந்தது தெரிய வந்தது.
போலியாகத் தமிழக பதிவில் பயன்படுத்தி பஸ்ஸை இயக்கியதால் மாதத்திற்கு ரூ.3 லட்சம் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர். போலி பதிவெண் கொண்ட பஸ்ஸை பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பஸ் இன் உரிமையாளர் யார் எனக் கண்டுபிடித்து அவருக்கு 100% வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்படும் என சுமேஷ் தெரிவித்தார். இதேபோல் தமிழகத்தில் ஏராளமான போலி பதிவெண் கொண்ட பஸ்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினால் அதிக வாகனங்கள் பிடிபட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.