கடலூரில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் தனியார் பள்ளி வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுநர் உட்பட மொத்தம் 5 பேர் அந்த பேருந்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயிலும் ஓடும் பாதையிலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியில் கேட் கீப்பர் அலட்சியமாக இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டானது 'Non inderlocking' கேட் என்பதால் அதை மூடுவதற்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்படும் என்ற நிலையில் இன்று காலை ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடுவதற்கான தகவல் முறையாக அளிக்கப்பட்டதா அல்லது இல்லையா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது. இருப்பினும் இந்த விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வேன் ஓட்டுநர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரு குழந்தைக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் விபரம்: ஆறாம் வகுப்பு மாணவன் நிவாஸ், பதினொன்றாம் வகுப்பு மாணவி சாருமதி