தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டார்மடம், தாமரைமொழி கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதான சிவசூரியன். இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி, 9 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் தட்டார்மடம் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்குச் சென்றுவிட்டு, பின்னர் தனது அண்ணன் சின்னத்துரையுடன் பைக்கில் வேப்பங்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
11 மணியளவில், மெஞ்ஞானபுரம் - வேப்பங்காடு இடையே சென்று கொண்டிருந்தபோது, இவரைப் பின்தொடர்ந்து வேகமாக வந்த கார் ஒன்று, வேப்பங்காடு சர்ச் அருகே பைக்கின் மீது வேகமாக மோதியது. இதில், நிலை தடுமாறி சிவசூரியனும் சின்னத்துரையும் கீழே விழுந்தனர். அப்போது, அந்தக் காரில் இருந்து இறங்கி ஓடி வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், இருவரையும் அரிவாளால் சுற்றி வளைத்தது. உயிர் தப்பிக்க, இருவரும் தென்னந்தோப்புக்குள் ஓடியுள்ளனர். பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற கும்பல், சிவசூரியனைச் சரமாரியாக வெட்டியதில், அவர் சரிந்து விழுந்து, சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அந்தக் கும்பல் வேறு ஒரு காரில் ஏறி தப்பிச் சென்று விட்டது.
தகவல் அறிந்த டி.எஸ்.பி. ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிவசூரியனின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்து உயிர் தப்பிய சின்னத்துரையை மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட சிவசூரியன், கடந்த ஜூலை 16 ஆம் தேதி, தாமரைமொழி கிராமத்தைச் சேர்ந்த தனது அக்காவின் கணவரான பைனான்சியர் கந்தையாவுடன் குடும்பப் பிரச்சினை தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், தட்டார்மடம் பஜாரில் வைத்து கந்தையாவை வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கில், தட்டார்மடம் போலீசார் சிவசூரியனைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்த நிலையில், 9 ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் சிவசூரியன் வெளியே வந்த நிலையில், இன்று(10.10.2025) தட்டார்மடம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, தனது அண்ணன் சின்னத்துரையுடன் பைக்கில் சென்றபோது, பின்தொடர்ந்து வந்து, பழிக்குப் பழியாக, பைனான்சியர் கந்தையாவின் உறவினர்கள் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாமா என்ற கோணத்திலும், போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் தடயங்களைக் கைப்பற்றி, தலைமறைவாக உள்ள கொலைக் கும்பலை, போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.கொலை வழக்கில் சிக்கி, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து, காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மீது, காரை வைத்து மோதி, ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி