கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜகோபால்நகர் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான லலிதா. இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். லலிதாவுக்கு திருமணமாகிய நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இதனிடையே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 51 வயதான லட்சுமி நாராயணா என்பவருடன் லலிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. லட்சுமி நாராயணாவும் ஏற்கெனவே திருமணமாகி, மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில்தான் லட்சுமி நாராயணாவுக்கும் லலிதாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நெருக்கமாக மாறியது. அதனால் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டு, திருமணம் செய்துகொள்ளாமலேயே கடந்த 10 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்தச் சூழலில் லலிதாவின் நடத்தையில் லட்சுமி நாராயணாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், தனக்குத் தெரியாமல் லலிதா வேறு ஒரு ஆணுடன் பழகுவதாக நினைத்த லட்சுமி நாராயணா அடிக்கடி இது தொடர்பாகத் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

அந்த வகையில் சம்பவத்தன்று லட்சுமி நாராயணா, லலிதாவிடம் “யாருடன் தொடர்பு வைச்சிருக்கே… யாரு அவன்…” என்று கேட்டுத் தகராறு செய்துள்ளார். பின்னர் இந்தத் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த லட்சுமி நாராயணா வீட்டில் இருந்த சேலையால் லலிதாவின் கழுத்தை நெறித்துள்ளார். இதில் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே லலிதா பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் குற்ற உணர்ச்சிக்கு ஆளான லட்சுமி நாராயணா அதே சேலையை அறையில் இருந்த மின் விசிறியில் கட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலை அந்த வழியாகச் சென்ற அக்கம்பக்கத்தினர் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராஜகோபால்நகர் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment