திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டிக்கு அருகே அமைந்துள்ளது பெத்திக்குப்பம். இந்தப் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் தேவகி செல்வம். 28 வயதான இவர், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 31 ஆம் தேதி காலை தேவகி செல்வம் தன்னுடைய தோழிகளான கும்மிடிப்பூண்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த பவானி, காயத்ரி மற்றும் கல்லூரி மாணவியான ஷாலினி ஆகியோருடன் நால்வரும் எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கடற்கரை வார்பு பகுதிக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

Advertisment

அப்போது கல்லூரி மாணவி ஷாலினி கடலில் இறங்கி குளித்து விளையாடிக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் ராட்சத அலையில் சிக்கிய ஷாலினி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. உடனே அருகில் இருந்த தேவகி, பவானி, காயத்ரி ஆகிய மூன்று பேரும் மாணவியைக் காப்பாற்ற கடலில் இறங்கியபோது அவர்களும் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Advertisment

சிறிது நேரம் கழித்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் வார்பு பகுதிக்குச் சென்று பார்த்தபோது, இளம்பெண்கள் நால்வரும் கடலில் சடலமாக மிதந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள், உடனடியாக சடலமாக இருந்த நால்வரையும் மீட்டு, எண்ணூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்ட உடல்களை வாகனங்களில் ஏற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், உயிரிழந்த நால்வரும் கடல் அலையில் சிக்கி ஒருவருக்கொருவர் காப்பாற்ற முயன்று உயிரிழந்தார்களா? அல்லது தற்கொலை எண்ணத்தில் இப்பகுதிக்கு வந்து உயிரிழந்தார்களா? எனப் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

மேலும், சம்பவம் தொடர்பாக பெரியகுப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், “பொதுவாக கடல் பகுதிக்கு யாரேனும் வந்தால் கடலில் விளையாடக் கூடாது என எச்சரித்து அனுப்புவோம். ஆனால், அவர்கள் வார்பு பகுதியின் மறைவான இடத்திற்குச் சென்றதால் அவர்கள் இருப்பதே யாருக்கும் தெரியவில்லை. சில மணிநேரங்கள் கழித்து வந்து பார்த்தபோது கடலில் உடல்கள் மிதப்பது போல இருந்ததால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தோம்” எனக் கூறினர்.

எண்ணூர் பகுதியில் நால்வரும் ஒரே நேரத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.