பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெரியம்மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி என்பவரின் மகன் கமலக்கண்ணன். இவர் கடந்த 20 ஆம் தேதி அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்காகச் சென்றுள்ளார். பின்னர், டாஸ்மாக் கடையில் மது பாட்டில் ஒன்றை வாங்கி அங்கேயே அமர்ந்து குடித்துள்ளார். சிறிது நேரம் கழித்து அதே இடத்திலேயே கீழே சாய்ந்து கிடந்துள்ளார். சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் எந்த வித அசைவும் இன்றி கிடந்த கமலக்கண்ணனை அப்பகுதி மக்கள் எழுப்ப முயன்றுள்ளனர்.
ஆனால், அவர் எழுந்திருக்காத நிலையில் கமலக்கண்ணன் உயிரிழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் கமலக்கண்ணன் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனிடையே மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாங்காடு போலீசார் பார்த்த போது, கமலக்கண்ணன் உடல் ஏற்கெனவே அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததாகத் தெரியவந்தது.
அதையடுத்து அங்கு சென்ற போலீசார் கமலக்கண்ணனின் குடும்பத்தாரிடம் உடலைப் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு கமலக்கண்ணனின் குடும்பத்தார் ஒப்புக்கொண்டதை அடுத்து, உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, மது அருந்தியதால் தான் கமலக்கண்ணன் உயிரிழந்தாரா? அல்லது வேறு எதாவது காரணமாக என்று தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெரியம்மத்தூர் அரசு மதுபானக் கடையில் சுத்தமான மதுபானங்கள் இல்லை என்றும், போலியான மதுபானங்களே விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக சம்பந்தப்பட்ட மதுபானக் கடையை ஆய்வு செய்து, தரமற்ற மதுபானம் விற்கப்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மதுபானக் கடையில் மது அருந்திக்கொண்டிருந்த நபர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us