kovai Photograph: (vellingiri)
கோவை மாவட்டம் பூண்டி அருகே அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலை. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இது, ஒரு புனிதத் தலமாகவும் பார்க்கப்படுகிறது. ஏழு மலைகளைக் கொண்ட இந்த வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையில் சுயம்புலிங்கம் அமைந்துள்ளது. இதனைக் காண, ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இம்மலைக்கு வருகை தருவது வழக்கம். குறிப்பாக, பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலையேற்றம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பிற மாதங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த காலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த கரடுமுரடான பாதைகளைக் கடந்து பக்தர்கள் மலையேற்றம் செய்கின்றனர். இந்த மலையின் பாதை நெடுந்தூரமாக இருப்பதாலும் , இந்த பாதைகள் கரடு முரடாக இருப்பதாலும் உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் மலையேற்றம் செய்வது ஆபத்தானது என்று கூறப்படுகிறது . எனவே, இந்த மலையில் பக்தர்கள் மலையேறுவதற்கு முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதற்காக, 6வது மலையில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (09-03-26) கோவை மாவட்டம் கெம்பட்டியை சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் (48) என்பவர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது, முதல் மலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் இழந்துள்ளார். இதையடுத்து, இந்தசம்வம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் டோலி தொழிலாளர்களின் உதவியுடன் அவரது உடலைக் கீழே கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது, இந்த ஆண்டில் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது நிகழும் மூன்றாவது மரணமாகும்.
ஏற்கனவே, சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த பரு கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மலையேற்றத்தில் ஈடுபட்டார். ஏழு மலைகளை ஏறி சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அவர் முதல் மலையில் வரும் போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு கீழே விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர், வனத்துறையினர் அவரை மீட்டு மலை அடிவாரத்தில் உள்ள மருத்துவ முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது மூன்றாவதாக ஒருவர் உயிர் இழந்துள்ளது பக்தர்களிடையே மேலும் சோகத்தை அதிகரித்துள்ளது.
Follow Us