திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுக்காவுக்கு உட்பட்ட ஓடைக்காடு குன்னம்பதியைச் சேர்ந்த ஓட்டுநர் யோகநாதன். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும் சுதர்சன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனது தங்கையைப் பார்த்துவிட்டு, கிணத்துப்பாளையம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சம்பவத் தன்று இரவு சுமார் 10 மணிக்கு ஓட்டுநர் யோகநாதன் சென்றுள்ளார்.

Advertisment

அப்போது, நெட்டச்செல்லாம்பாளையம் பகுதி வழியாக கிணத்துப்பாளையம் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் எந்தவிதத் தடுப்புகளும் இல்லாததால், சிறு பாலம் அமைக்கத் தோண்டப்பட்ட குழியில் ஓட்டுநர் யோகநாதன் விழுந்துள்ளார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அந்தக் குழியிலேயே உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவர்கள் பெருந்துறை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழியிலிருந்து யோகநாதனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

மேட்டுப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஐந்து இடங்களில் சிறு பாலம் கட்டுமானப் பணிகள் மற்றும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தத்தை பிரகாஷ் என்பவர் எடுத்துச் செய்து வருகிறார். இந்நிலையில், இந்தக் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் “பணிகள் நடைபெற்று வருகிறது” என்ற எச்சரிக்கைப் பலகை, பேரிகார்ட் உள்ளிட்ட எந்தவிதப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், உயிரிழந்த யோகநாதனுக்கு அலட்சியமாகச் செயல்பட்ட ஒப்பந்ததாரர் பிரகாஷ் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; இல்லையென்றால் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்களும் கிராம மக்களும் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த பெருந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலம் கட்டும் பணியின் போது எந்தவிதப் பாதுகாப்பு எச்சரிக்கைப் பலகையும் இல்லாமல் அலட்சியமாகச் செயல்பட்டதன் விளைவாக அப்பாவி ஓட்டுநர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment