தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் தெருநாய் ஒன்று ஆடு, மாடுகள் மற்றும் மனிதர்களை துரத்தித் துரத்தி கடித்து வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (28/07/2025) காலை பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட தமிமுன் அன்சாரி என்ற 10 வயது சிறுவன் அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.

அப்பொழுது சிறுவனை துரத்தி வந்த தெருநாய் சிறுவன் தமிமுன் அன்சாரியை கடித்துக் குதறியது. அருகில் இருந்த ஒருவர் கல்லை தூக்கி நாயை துரத்தியதால் சிறுவன் லேசான காயத்துடன் தப்பினான். தற்போது சிறுவன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.  தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.