வரதட்சணை கேட்டு ஒரு பெண்ணை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, 1 மாத கைக்குழந்தையை சாலையில் தூக்கி வீசிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பத் பகுதியைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண்ணான மோனிகா. இவரது முதல் கணவர் இறந்த பிறகு பத்ரகா கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்ற நபரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில், வரதட்சணை தர வேண்டும் என அசோக்கும், அவரது சகோதரனும் மோனிகாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 1 மாதத்திற்கு முன்பு தம்பதியருக்கு குழந்தை பிறந்த நிலையில், மோனிகா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

Advertisment

மோனிகா உயிரிழந்த தகவலை அறிந்த மோனிகாவின் குடும்பத்தினர் இறுதிச் சடங்கிற்கு அசோக் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களை, அசோக் குடும்பத்தினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், மோனிகாவின் ஒரு மாதக் கைக்குழந்தையை அசோக் குடும்பத்தினர் சாலையில் தூக்கிப் போட்டுள்ளனர். சாலையின் ஓரத்தின் தூசி மற்றும் சேற்றோடு குழந்தை கிடந்ததை அங்கிருந்த கிராம மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். குழந்தை அழுதவாறு உதவியற்ற நிலையில் கிடந்த போதும், அங்கிருந்த யாரும் குழந்தையை தூக்காமல் அருகில் உள்ள டிராக்டரில் சிலர் ஏறிச் சென்றனர். சில நிமிடங்களுக்கு பின், அந்த குழந்தையை எடுக்க ஒரு நபர் முன் வந்தார். இதனால், அந்த இடமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மோனிகா தற்செயலாக உயிரிழக்கவில்லை என்றும் வரதட்சணை கேட்டு அசோக் குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் மோனிகாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், மோனிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில், மோனிகா கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. அதன்படி, அசோக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment