சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் 38 வயதான மகேஸ்வரி. இவரது கணவர் பாண்டிகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், இத்தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் மருத்துவமும், மற்றொருவர் பத்தாம் வகுப்பும் படித்து வந்துள்ளார். இச்சூழலில் ஆவுடைப் பொய்கை பகுதியில் உள்ள தங்களது நிலத்தைப் பார்ப்பதற்காகச் சென்ற மகேஸ்வரி காரில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு முகம் சிதைந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

Advertisment

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த குன்றக்குடி போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் மகேஸ்வரியை மருதுபாண்டியர் நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான சசிக்குமார் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Advertisment

சசிக்குமார் மகேஸ்வரிக்கு கார் ஓட்டுவதற்குப் பயிற்சியளித்து, அவ்வப்போது அவருக்கு ஆக்டிங் டிரைவராகவும் நட்புடன் பழகி வந்திருக்கிறார். இச்சூழலில் சசிக்குமார் மகேஸ்வரியிடம் கடனாகக் குறிப்பிட்ட தொகையை வாங்கியிருக்கிறார். அதன்பின் பணத்தைத் திருப்பித் தராததால் மகேஸ்வரி கடன் பணத்தை கேட்டு சசிக்குமாரைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் சசிக்குமார் மகேஸ்வரியை ஒரே அடியாக முடித்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று மகேஸ்வரியை காரில் கூட்டிச்சென்ற சசிக்குமார் காரில் வைத்துக் கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மகேஸ்வரி அணிந்திருந்த 13 பவுன் தங்க நகைகளையும் சசிக்குமார் திருடிச் சென்றது தெரியவந்தது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கொலை தூண்டுதலின் பேரில் நடந்திருப்பதாகவும், ஒருவர் மட்டுமே இந்தக் கொலையைச் செய்திருக்க முடியாது என்றும், சம்பவத்திற்குக் காரணமான மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் மகேஸ்வரியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று 200க்கும் மேற்பட்டோர் காரைக்குடி - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

உடனடியாக அங்கு வந்த தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட இடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்பிறகு போராட்டத்தைக் கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.