புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்த விவசாயிகளான மதியழகன் - சகுந்தலா தம்பதியின் மகன் செந்தூரன் (25). இவர், தொழிற்கல்வி பட்டயப் படிப்பை முடித்துள்ளார். தன் குடும்ப சூழ்நிலை கருதி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு பிழைப்பிற்காகச் சென்றுள்ளார். அங்கு ஒரு கட்டுமான தனியார் நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வழக்கம் போல இன்று (17-11-25) சக தொழிலாளர்களுடன் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மாலை நேரத்தில் அந்தப்பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. அந்த நேரத்தில் கட்டுமானப் பணியில் இருந்த செந்தூரன் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மின்னல் தாக்கி சுருண்டு விழுந்த செந்தூரன் உடலைப் பார்த்து சக தொழிலாளர்கள் கண்ணீருடன் தனியார் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, செந்தூரன் பணி செய்த சிங்கப்பூர் தனியார் நிறுவன ஊழியர்கள் அவரது பெற்றோருக்கு போன் செய்து தகவல் கூறியுள்ளனர். இந்த தகவலைடுத்து அந்த குடும்பமும் உறவினர்களும் கதறி துடித்தனர். செந்தூரன் பிழைக்க போன இடத்தில் உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில்ஆழ்ந்துள்ளது. இது குறித்து உறவினர்கள் கூறும் போது, குடும்ப வறுமையை போக்க பிழைப்பிற்காக சிங்கப்பூர் போன இடத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரமாக உள்ளது. மேலும் பணியின் போது உயிரிழந்த செந்தூரன் குடும்பத்திற்கு உறிய இழப்பீடு வழங்குவதுடன் அவரது உடலை விரைவாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
Follow Us