தூத்துக்குடி மீளவிட்டான் அருகேயுள்ள பண்டாரம் பட்டி காட்டுப்பகுதியில் முள்வேலி செடிகளுக்கு மத்தியில் தலை மட்டும் தனியாக கிடப்பதாக சிப்காட் போலீசாருக்கு 21 ஆம் தேதி மாலை ஒரு தகவல் கிடைத்துள்ளது. தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதிர், சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ், சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு  காதில் தங்க கம்மல் அணிந்திருந்த ஒரு பெண்ணின் தலை மட்டும் சிதைந்த நிலையில் கிடந்தது.  

Advertisment

இதனைத் தொடர்ந்து உடலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது,  தலை கிடந்த பகுதியின் அருகே இருந்த ஓடையில் பெண்ணின் உடல் எலும்புக்கூடு மட்டும் கிடந்ததை கண்டுபிடித்தனர்.‌ அதன் அருகே ஒரு மணி பர்ஸ் மற்றும் நான்கு சவரன் தங்க சங்கிலியும் கிடந்துள்ளது. இதையடுத்து தலை மட்டும், உடல் எலுப்புகூடை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் மற்றும் விரல் ரேகை பிரிவு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.‌ தலையும் எலும்பு கூடும் சிதைந்த நிலையில் இருந்ததால் இறந்து பத்து நாட்கள் ஆகி இருக்கும் என சந்தேகித்த போலீசார், அப்பகுதியில் காணாமல் போன பெண்களின் பட்டியலையும் சேகரித்தனர்.  

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்த 60 வயதான அய்யம்மாள் என்பவர் கடந்த 4ஆம் தேதி அன்று தனது மகன் தேவராஜ் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார் என்பதும்,  இது குறித்து அவரது மகன் தேவராஜ் ஏற்கனவே சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. பின்னர் அய்யம்மாள் குறித்த விசாரணையில், மகனின் பராமரிப்பில் இருந்து வந்த அய்யம்மாள் லேசான மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்திருக்கிறது.

சம்பவ நடைபெற்ற இடத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சில நாட்களாக சுற்றித் திரிந்துள்ளார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்தவர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக  இருக்குமா என்ற கோணத்திலும், தலை துண்டிக்கப்பட்டு எப்படி இறந்தார்? உடல் கிடந்த பகுதி அருகே சுடுகாடு ஒன்று உள்ளது. எனவே அங்கு ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் உடலில் இருந்து தலையை மட்டும் வெட்டி எடுத்து பூஜைக்கு ஏற்பாடு நடந்ததா அல்லது நர பலிக்காக மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டதா என பல கோணங்களில் போலீசார் துருவி துருவி விசாரனை நடத்தி  வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியின் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி