தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புத்தன் தருவை சர்ச் தெருவைச் சேர்ந்தவர் மெட்டில்டா ஜெயராணி. இவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் 57 வயதான ஜேம்ஸ் சித்தர் செல்வன். இவர் கார்களை வாடகைக்கு விட்டு டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தட்டார்மடம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
டிசம்பர் 3 ஆம் தேதி (நேற்று) மாலை தனது சொந்த ஊரான சாத்தான்குளம் அடுத்துள்ள திருப்பணி புத்தன் தருவைக்குச் சென்று அங்கு வசித்து வரும் தாயைச் சந்தித்துவிட்டு மீண்டும் தட்டார்மடம் நோக்கி வந்துள்ளார்.
இந்நிலையில் திருப்பணி புத்தன் தருவைக்கும் தட்டார்மடத்துக்கும் இடையே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜேம்ஸ் சித்தர் செல்வன் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் சென்றது. சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜேம்ஸ் சித்தர் செல்வனை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சாத்தான்குளம் காவல் நிலைய டூட்டியில் இருந்த உதவி ஆய்வாளர் மெட்டில்டா ஜெயராணி தனது கணவர் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து கணவரின் உடலைக்கண்டு கதறி அழுதார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஜேம்ஸ் சித்தர் செல்வனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவருக்கும் நிலப் பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததும், மேலும் ஜேக்கப்பின் உறவுமுறைப் பெண் ஒருவருக்கும் கொலையான ஜேம்ஸ் சித்தர் செல்வனுக்கும் இடையே நெருக்கமான நட்பும் கருத்துவேறுபாடும் இருந்து வந்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த இரு பிரச்சனைகளின் காரணமாக காவல் உதவி ஆய்வாளரின் கணவரான டிராவல்ஸ் அதிபர் ஜேம்ஸ் சித்தர் செல்வன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
- மூர்த்தி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/04/safa-2025-12-04-15-51-00.jpg)