ராமநாதபுரம் மாவட்டம் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரியப்பன் - கவிதா தம்பதி. இவர்களுடைய 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி - முத்துமாரி தம்பதியின் மகன் முனிராஜ். 20 வயதான இவர்.. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்த சூழலில், முனிராஜுக்கு 12 ஆம் வகுப்பு மாணவியை பிடித்துப்போக தனது காதலை வெளிப்படுத்துவதற்காக மாணவி பள்ளி செல்லும்போது அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார். இதன் நீட்சியாக, கடந்த ஒரு வருடமாக மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்துவந்த முனிராஜ்.. தனது காதலை அவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்த நிலையில், தனது காதலை ஏற்கும்படி முனிராஜ் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால், அதையெல்லாம் மாணவி கண்டுகொள்ளாமல் இருந்ததால்.. முனிராஜ் தலைக்கேறிய ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், பள்ளி மாணவி இன்று வழக்கம் போல் தன்னுடைய வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த முனிராஜ்.. மாணவியை இடைமறித்து தன்னை காதலிக்கும்படி தகராறு செய்திருக்கிறார். ஆனால், மாணவி தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளாததால்.. கடும் ஆத்திரமடைந்த முனிராஜ்.. தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மாணவி மயங்கி விழுந்துள்ளார். அங்கு மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாணவி இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாணவியை கத்தியால் குத்திய முனிராஜ் அருகில் இருந்த ராமேஸ்வரம் நகர் காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்று சரணடைந்துள்ளார். மேலும், தன்னை காதலிக்க மறுத்ததால் மாணவியை கொலை செய்துவிட்டதாக காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர், முனிராஜை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். மேலும், முனிராஜ் தொடர்பான கூடுதல் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். உயிரிழந்த மாணவியின் உடல் ராமேஸ்வரம் அரசு மருத்துவக் கல்லூரி பிரேத பரிசோதனை செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளது.
காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us