Tragedy befalls laborer's daughter before reaching her destination
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் திருநாளூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவேலு. மாற்றுத் திறனாளியான இவர், கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மனைவியும் விவசாய கூலி வேலை செய்பவர். பள்ளிப் படிப்பை கூட முடிக்காத கூலித் தொழிலாளிகள், நம்மை போல நம் குழந்தைகளும் கஷ்டப்படக்கூடாது, தாங்கள் கூலி வேலை செய்தாலும் தன் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று கூலி வேலைக்குச் சென்று தங்களின் ஒரு மகன் இரு மகள்களையும் நன்றாக படிக்க வைத்தனர். அவர்களும், பெற்றோரின் வறுமை நிலையறிந்து நன்றாக படித்தனர்.
இதில் 3வது குழந்தையான நிதிலா, பொறியியல் படிப்பை முடித்த பிறகு அரசுப் பணியை இலக்காக வைத்து கடினமாக படிக்கத் தொடங்கினார். குரூப் 1 தேர்வு எழுத வேண்டும், உயர்ந்த பதவி பெற வேண்டும் என்ற இலக்கோடு படித்தவர் இடையில் வந்த குரூப் 4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கோவை வனத்துறையில் குற்றப்பிரிவில் பணிக்குச் சேர்ந்து 6 மாதங்களே ஆகிறது. தங்கள் குடும்பத்தில் முதல் அரசு ஊழியர் என்று மகள் நிதிலாவை கொண்டாடிய பெற்றோர் இனி நம் வறுமை குறையும் என்று பெருமையாக இருந்தனர். வனத்துறை பணியில் இருந்தாலும், தன் ஆசை குரூப் 1 என்பதை மறக்கவில்லை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/03/id-2025-12-03-22-33-25.jpg)
சில நாட்களுக்கு முன்பு சிட்டங்காட்டில் இருந்து அரசுப் பணிக்குச் சென்றுள்ள தன் தோழிக்கு செல்போனில் பேசிய நிதிலா, ‘நாம இத்தோட முடிச்சுடக்கூடாது குரூப் 1க்கு தயாராகனும் கலெக்டர் ஆகனும். கோச்சிங் போகனும் நீயும் தயாரா இரு’ என்று கூறியுள்ளார். தோழியும் சரி என்று கூறியுள்ளார். அடுத்த நாள் நேற்று முன்தினம் , வழக்கம் போல சக ஊழியர்களுடன் நுண்ணறிவு தகவல் சேகரிப்பு பணியில் இருந்து படம் எடுத்துள்ளார். அடுத்து கொஞ்ச நேரத்தில் வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நிதிலாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் பெரும் கனவுகளோடு இருந்த நிதிலா கண் திறக்காமலேயே மரணத்தை தழுவியுள்ளது தெரிய வந்தது. இதனைக் கேட்டு கோவை வனத்துறை அலுவலகமே கண்ணீர் விட்டு கதறியது.
நேற்று அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வந்த போது ஒட்டு மொத்த ஊரே கூடி நின்று கண்ணீர் வடித்தது. பெற்றோரையும் உடன் பிறந்தோரையும் தேற்ற முடியவில்லை. கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த நிதிலா, இப்படி பொட்டலமா கொண்டு வந்து போட்டிருக்காங்களே என்று உறவினர்கள் கதறினர். தொடர்ந்து நிதிலாவின் இறுதிச் சடங்கில் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குநர் மகேந்திரன் தலைமையில், வனச்சரக அலுவலர்கள் திருமயம் குமார், கோவை நிர்மலா முன்னிலையில் துறை சார்ந்த மரியாதை செய்தனர். இதில் கோவை, அறந்தாங்கி, திருமயம் பகுதியைச் சேர்ந்த வனத்துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள், கிராமத்தினர் பங்கேற்றனர். பணியின் போது உயிரிழந்த நிதிலா குடும்பத்திற்கு அனைத்து அரசு இழப்பீடுகளையும் விரைவில் பெற்றுக் கொடுப்போம் என்றனர் அதிகாரிகள். கனவு காணுங்கள் என்றார் அப்துல் கலாம். ஆனால் அந்த கனவு நிறைவேறாமல் கறைந்து போனார் நிதிலா.
Follow Us