கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தைச் சேர்ந்தவர் 30 வயதான விஜய். இவரது மனைவி ரஞ்சனா. விஜய் திருப்பூரில் உள்ள பனியக நிறுவனத்தில் வேலை செய்து வருவதால், தனது மனைவியுடன் திருப்பூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், ரஞ்சனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அதற்காக ரஞ்சனா திருப்பூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், ரஞ்சனாவைப் பரிசோதித்தபோது வயிற்றில் குழந்தையின் தலை திரும்பியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, உடனடியாக ரஞ்சனா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சூழலில், கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது விக்னேஷ் என்பவரின் மனைவி கீர்த்திகாவும் பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஞ்சனாவும், கீர்த்திகாவும் ஒரே வார்டில் அனுமதிக்கப்பட்டதால், அவர்களது கணவர்களான விஜயும், விக்னேஷும் ஒன்றாகப் பழகி நட்பாகியுள்ளனர்.
இந்த நிலையில், விஜய் மற்றும் விக்னேஷ் இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது விஜய் விக்னேஷைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, விக்னேஷின் மனைவி கீர்த்திகாவிற்கு குழந்தை பிறந்து வீட்டிற்குச் சென்றுவிட்டனர். ஆனால், விஜய் தாக்கியதை மறக்காத விக்னேஷ், எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து, மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த விக்னேஷ், விஜய்யிடம் தனியாகப் பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், மருத்துவமனைக்கு அருகே வைத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, விஜய்யைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் கீழே சரிந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டுச் சென்றனர். ஆனால், விஜய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனிடையே, அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததுடன், விக்னேஷையும் பிடித்து அங்கு வந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.