கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பானுமதி. இவருக்கு 52 வயதாகிறது. இவர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிங்காநல்லூர் அருகே உள்ள காமராஜர் சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வாகனத்தை பானுமதியின் மகன் தான் ஓட்டி வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சரவணா பார்க்கிங் அருகில் வந்துகொண்டிருந்தபோது, பின்னால் அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த ஈச்சர் வாகனம் ஒன்று வந்துள்ளது. அந்த நேரத்தில், டூவீலரை ஓட்டிவந்த ஆய்வாளரின் மகன் அங்கிருந்த ஸ்பீட் பிரேக்கர் மீது ஏறி இறங்கியபோது சற்று தடுமாறியபோது போல் தெரிகிறது. அப்போது, இவர்கள் பின்னால் வந்துகொண்டிருந்த ஈச்சர் வாகனமும் ஆய்வாளர் பானுமதி வந்த டூவீலரும் லேசாக மோதியுள்ளது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தபோது ஆய்வாளரின் மகன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால், மெயின்ரோட்டின் வலதுபுறமாக விழுந்த ஆய்வாளர் பானுமதி மீது.. பின்னால் வந்த ஈச்சர் வாகனம் ஏறி இறங்கியுள்ளது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த பானுமதி அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார்.
அப்போது, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பானுமதியை மீட்டு கோவை காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆய்வாளர் பானுமதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, ஸ்பாட்டுக்கு வந்த போலீசார்.. பானுமதி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து, இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து.. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் பெண் காவலர் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.