வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த இராமநாயினிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஜானகிராமன் (55). இவர் அதே பகுதியில் தனது நிலத்தில் நர்சரி வைத்துள்ளார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் விகாஷ் (25), ஜீவா (22) ஆகிய இரண்டு பேர் தந்தைக்கு உதவியாக நர்சரியை கவனித்து வந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் நேற்று (01.12.2025) இரவு வழக்கம் போல் இவர்கள் மூவரும் வெவ்வேறு திசையில் கண்காணிப்புக்கு (ரவுண்டு) சென்றுள்ளனர். அப்போது திடீரென தந்தை ஜானகிராமனின் அலறல் சந்தம் கேட்டு மகன்கள் விகாஷ், ஜீவா ஆகியோர் ஓடிபோய் பார்த்தனர். அப்போது பக்கத்து நிலத்தில் வைத்திருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி தந்தை துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளார். அவரை மீட்க முயன்ற போது இரண்டு மகன்களும் மின் வேலியில் சிக்கி தந்தை, மகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் போய் பார்த்த போது மூன்று பேரும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர், 3 பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (52) என்பவர் வேறு ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் நெல் பயிரிட்டு இருப்பதாகவும், அதனை வனவிலங்குகள் சேதப்படுத்தாமல் இருக்க சட்டவிரோதமாக மின் வேலி அமைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தற்போது சங்கர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை வேப்பங்குப்பம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisment

சட்டவிரோதமாக இப்படி பலர் மின்வேலி அமைப்பது மின்வாரிய அதிகாரிகளுக்கு, பணியாளர்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் தெரிந்தும் பணம் வாங்கிக் கொண்டு இதனை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இங்கு மட்டுமல்ல பல இடங்களிலும் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க மின்வேலி அமைக்கின்றனர். மின்வேலி அமைக்கப்படுவதை மின்துறையினர் கண்டுகொள்ளாமல் இருக்க அந்தந்த பகுதி மின்வாரிய ஊழியர்களுக்கு லஞ்சமாக பணம் தரப்படுகிறது என குற்றம் சாட்டப்படுகிறது. அதனால் தான் இப்படி உயிர் பலி ஏற்பட்டுள்ளன என்கிறார்கள் ஆற்றாமையுடன் கிராம மக்கள்.