பள்ளி மாணவர்களுடன் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து, மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதால் பேருந்து ஓட்டுநர் மரணம் அடைந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து தனியார் பள்ளி மாணவர்கள் 53 பேர், தனியார் சுற்றுலா பேருந்து மூலம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் கோலிலை சுற்றிபார்த்துவிட்டு விருத்தாசலம் நோக்கி சென்றனர். பேருந்து சிதம்பரம் அருகே வயலூர் கிராமத்தின் அருகே சென்றபோது ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது பேருந்து ஓட்டுநர், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் தனியார் சுற்றுலா பேருந்து ஓட்டுநர் விருத்தாசலம் அருகே சேப்ளாநத்தம் காமராஜ் நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் தினகரன் (36) படுகாயமுற்றார். பேருந்தில் வந்த மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இதையடுத்து ஓட்டுநர் தினகரனை, அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டுநர் மரம் அல்லாமல் அருகே உள்ள வாய்க்காலில் பேருந்தை இறக்கி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். இதில் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் ஓட்டுநர் நெஞ்சு வலியிலும் மாணவர்களை காப்பாற்றியுள்ளார் என அந்த பகுதியில் விபத்தை பார்த்தவர்கள் கூறினார்கள்.
Follow Us