பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தோணி சாமி. இவரது மனைவி கலா. இந்தத் தம்பதியினருக்கு இரு மகன்களும், மீரா ஜாஸ்மீன் என்ற மகளும் உள்ளனர். அந்தோணி வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், மகளின் படிப்பிற்காக இவர்கள் குடும்பத்துடன் தற்போது திருச்சி மாநகர் சீனிவாசநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
மகள் மீரா ஜாஸ்மீன் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. கணிதம் பயின்றார். கடந்த ஏப்ரல் மாதத்துடன் படிப்பு முடிந்த நிலையில், மீரா ஜாஸ்மீன் வேலை தேடும் பணியில் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், 30 ஆம் தேதி காலை மீரா ஜாஸ்மீன் தனது தாயிடம் வேலைக்காக நேர்காணல் ஒன்றுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளார். ஆனால், இரவு நேரமாகியும் மீரா ஜாஸ்மீன் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடினர். ஆனால், அவர் எங்கும் கிடைக்காததால், அந்தப் பகுதிக்கு உட்பட்ட அரசு தலைமை மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன மீரா ஜாஸ்மீனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதையடுத்து, மீரா ஜாஸ்மீனின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் ஆய்வு செய்தபோது, அது சமங்கலம் காப்புக் காட்டுப் பகுதியைக் காட்டியது. அதன்பேரில் அங்கு தேடியபோது, எரிந்த நிலையில் மீரா ஜாஸ்மீன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டறிந்தனர்.
உடல் கருகிய நிலையில் கிடந்த மீரா ஜாஸ்மீனின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அரசு தலைமை மருத்துவமனையில் மீரா ஜாஸ்மீன் உடலைப் பார்த்து அவரது தாய் கலா கதறி அழுத சம்பவம், அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணை கொலை செய்து பின்னர் எரித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இறந்து கிடந்த பெண்ணின் அருகில் இரண்டு பீர் பாட்டில்களும், இருசக்கர வாகனம் சென்ற தடங்களும் இருந்துள்ளதால், இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பெண்ணை அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. யார் அந்த இளைஞர்கள் என்பது குறித்து தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Follow Us