துாத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு அருகே உள்ள கல்லாமொழி பகுதியில் புதிதாக அனல் மின்நிலையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமின்றி வடமாநிலங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் 53 வயதான அர்ஜுன் பிரசாத் யாதவ். இவர் டெக்ஸ்செல் நிறுவனத்தின் லேபர் கான்ட்ராக்டராக, அனல் மின்நிலையத்தின் கட்டுமான பணியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த 5ம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற அர்ஜுன் பிரசாத்.. குலசேகரன்பட்டினத்திற்கு சென்று வருவதாக கூறி.. வெளியே சென்றுள்ளார். இதையடுத்து, அன்றிரவு சரியாக 9 மணியளவில் டெக்ஸ்செல் நிறுவனத்தின் அதிகாரி ஜெகதீசன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அர்ஜுன் பிரசாத், என்னை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள்.. அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார். பதற்றமடைந்த ஜெகதீசன், அங்கு நடந்ததை விவரமாக கேட்பதற்குள் அந்த செல்போன் அழைப்பு துண்டிக்கப்பட்டு செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தில் பணியாற்றுவர்கள் சிலர்.. அர்ஜுன் பிரசாத்தை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்காததால்.. ஜெகதீசன் இச்சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில்.. குலசேகரன்பட்டினத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறத்தில் அர்ஜுன் பிரசாத் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். மேலும், அவரது உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதால், பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற குலசேகரன்பட்டினம் போலீசார்.. அர்ஜுன் பிரசாத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில்.. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அர்ஜுன் பிரசாத் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த இரண்டு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், உயிரிழந்த அர்ஜுன் பிரசாத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி 1000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள்.. அனல் மின்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/08/2-2025-10-08-18-41-57.jpg)