சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன். 40 வயதான இவர்.. ரிக்‌ஷா ஓட்டும் தொழிலை செய்து வருகிறார். வெங்கடேசனுக்கு சரளா என்ற பெண்ணுடன் திருமணமாகி யுவராஜ் என்ற 15 வயது மகனும், காவியா என்ற 8 வயது மகளும் உள்ளனர். சிறுமி காவியா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 7ம் தேதி காலை காவியா தனது பள்ளிக்கு காலதாமதமாக சென்றதால், பள்ளி நிர்வாகம் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தாய் சரளா தன்னுடைய மகள் காவியாவுடன் தண்டையார்பேட்டை உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

Advertisment

அன்றைய தினம் பிற்பகல் நேரத்தில் காவியா தனது உறவினருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சிலிண்டரை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல குப்பை லாரி ஒன்று இருசக்கர வாகனத்திற்கு பின்னால் சென்றுள்ளது.  இவர்கள் குடியிருப்பு வளாகம் அருகே வந்தபோது.. திடீரென நிலை தடுமாறி சிலிண்டர் ஒருபுறமும் சிறுமி ஒருபுறமும் விழுந்துள்ளனர். அந்த நேரத்தில், பின்னால் வேகமாக வந்த மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரி.. சிறுமியின் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி காவ்யா துடிதுடித்து உயிர் இழந்தார்.

Advertisment

இதைப் பார்த்து அதிர்ந்துபோன அப்பகுதி மக்கள், உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து.. கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த குப்பை லாரி டிரைவரான சரண்ராஜ் என்பவரை சரமாரியாக தாக்கியும் குப்பை லாரி கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தண்டையார்பேட்டை போலீசார் பொதுமக்களின் இருந்து லாரி ஓட்டுநர் சரண்ராஜை மீட்டு காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதே போல், விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த காவியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து.. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கூறுகையில், "கைலாசம் சாலை இருபுறமும் கார், லாரி, ஆட்டோ உள்ளிட்ட தனியாருக்கு சொந்தமான ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஒரு வேகத்தடை கூட அமைக்கவில்லை. சாலையை ஆக்கிரமித்து இருக்கும் வாகனங்களால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் போக்குவரத்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என வேதனை தெரிவிக்கின்றனர். 

Advertisment