சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் புதுவயல் கீழ முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர்கள் சாதிக் மகன் முகமது இப்ராகிம் (18), மைதீன் மகன் முகமது (18). இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள அரசம்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்தனர். தற்போது தேர்வுகள் நடந்து வருகிறது. இன்று இந்த இரு மாணவர்களும் கடைசி தேர்வு எழுதியுள்ளனர்.

Advertisment

தேர்வு முடிந்ததும் மாணவர்கள் இருவரும் ஒரு விலை உயர்ந்த பைக்கில் வீட்டிற்குச் சென்றுள்ளனர். திருமயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு டிப்பர் லாரி இவர்கள் செல்ல வேண்டிய பிரிவு சாலையில் திரும்பிய போது வேகமாக சென்ற பைக்கை உடனே நிறுத்த முடியாமல் நிலைதடுமாறி டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த திருமயம் போலீசார் மாணவர்களின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து டிப்பர் லாரி ஓட்டுநர் நமணசமுத்திரம் கப்பத்தான்பட்டி சோக்கு மகன் பாண்டியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இது போன்ற விலை உயர்ந்த பைக்குகளில் எவ்வளவு வேகமாக சென்றாலும் போகும் வேகம்  தெரியாமலேயே பல விபத்துகள் ஏற்பட்டு வாழவேண்டிய ஏராளமான இளைஞர்கள் கடந்த சில மாதங்களில் உயிரிழந்துள்ளது வேதனை அளிக்கிறது. அதிலும் ஆவுடையார் கோவில் பகுதியில் கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் பலியானார்கள். இந்த சம்பவங்களை நினைத்து பெற்றோர்கள் படும் வேதனை சொல்லமுடியாத வேதனை தான்.

Advertisment