Tragedy befalls 17-year-old national level champion by Coach's in delhi
டெல்லியில் உள்ள கர்னி சிங் துப்பாக்கி சுடும் தளத்தில் தேசிய துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். சமீபத்தில் சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல வீர்கள் கலந்து கொண்டனர். அதன்படி, ஹரியானாவைச் சேர்ந்த 17 வயது துப்பாக்கி இளம் வீராங்கனையும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார். தேசிய துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் அங்குஷ் பரத்வாஜ், இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வந்தார்.
இந்த நிலையில், போட்டி முடிந்த பின்பு, பயிற்சியாளர் அங்குஷ் பரத்வாஜ், அந்த 17 வயது வீராங்கனையிடம் அவரின் திறமைகள் குறித்து விவரிப்பதற்காக தான் சொல்லும் இடத்திற்கு வரவேண்டும் என அந்த வீராங்கனையை அழைத்துள்ளார். அவரது பேச்சை நம்பிய வீராங்கனையும், அங்குஷ் பரத்வாஜ் சொன்னதற்கு ஒப்புக்கொண்டார். அதன்படி அந்த பயிற்சியாளர், வீராங்கனையை பரிதாபாத்தில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அறைக்கு சென்ற வீராங்கனையிடம் அங்குஷ் பரத்வாஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட வீராங்கனை போலீசில் புகார் அளித்தார். கடந்த டிசம்பர் 16 அன்று நடந்த இந்த சம்பவம் குறித்து வீராங்கனை கூறுகையில், ‘என்னிடம் துப்பாக்கி திறனை மதிப்பீடு செய்வதாகக் கூறி, என்னை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்தார். அங்கு என்னை ஒரு அறைக்கு வருமாறு வற்புறுத்திய பயிற்சியாளர், அந்த அறையில் என்னை பாலியல் தொந்தரவு கொடுத்தார்’ என்று குற்றம் சாட்டினார்.
பாதிக்கப்பட்ட வீராங்கனை கொடுத்த புகாரின் அடிப்படையில், அங்குஷ் பரத்வாஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக ஹோட்டல் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்வதோடு, வழக்கின் அனைத்து கோணங்களிலும் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us